Home உலக செய்திகள் “நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை” – இஸ்ரேல் தூதர் வெளிப்படை

“நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை” – இஸ்ரேல் தூதர் வெளிப்படை

0

 நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சற்று இழுபறி நிலவிய சூழலில் தற்போது இரண்டு தரப்பும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை அன்று ஜெனீவா நகரில் இந்த ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாக உள்ளது. இதற்கு முன்னதாக இருதரப்பு இணையவழியில் விர்ச்சுவலாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானை நம்புவதில்லை என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் ஏற்கெனவே எனது பல்வேறு நேர்காணலில் இதை சொல்லி உள்ளேன். எங்களுக்கு பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தானியர்கள் மீது நம்பிக்கை என்பது இல்லை.

பாகிஸ்தானின் அணுகுமுறை, யூதர்களுக்கு எதிராக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகள் என அவர்களின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை என்று கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப், இஸ்ரேல் குறித்து சமூக வலைதளத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. இஸ்ரேல் மனிதகுலத்தின் சாபம் என்று அவர் தெரிவித்திருந்தார். அதற்கு இஸ்ரேல் அப்போது எதிர்வினையாற்றி இருந்தார். இந்நிலையில், ருவன் அசார் இந்த கருத்தை இப்போது சொல்லியுள்ளார்.

பாகிஸ்தான் மத்தியஸ்தம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. இதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி செய்தார். அதேபோல மேற்காசிய போர் இடைநிறுத்தம், அதை தொடர்ந்து ஈரான் – அமெரிக்க தலைவர்கள் இஸ்லாமாபாத்தில் நடத்திய பேச்சுவார்த்தை உள்ளிட்டவை இதற்கான உதாரணமாக இருக்கிறது.

மேலும், அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானதை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சமூக வலைதள பதிவில் தெரிவித்திருந்தார். அப்போது இந்த பணியில் உறுதுணையாக இருந்ததாக கத்தார், சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் பெயரை ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version