ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்லோவேக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ வலியுறுத்தி உள்ளார்.
பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் இரவு ஸ்லோவேக்கியா தலைநகர் பிராடிஸ்லாவாவுக்கு சென்றார். அந்த நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவை அவர் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: இந்தியா, ஸ்லோவேக்கியா இடையிலான வர்த்தக உறவு வலுவடைந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் ஸ்லோவேக்கியாவின் முதல் செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் செலுத்தியது. இந்திய விண்வெளி துறை அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த துறையில் ஸ்லோவேக்கிய நிறுவனங்கள் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறேன்.
இரு நாடுகள் இடையே டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்திய தொழிலாளர்கள் ஸ்லோவேக்கியாவில் பணியாற்றுவது தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இரு நாடுகளும் அமைதியை முன்னிறுத்துகின்றன. அந்த வகையில் உலகத்தின் அமைதிக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். ஸ்லோவேக்கிய பிரதமர் ராபர்ட் இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்லோவேக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ கூறியதாவது: ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்லோவேக்கியா அங்கம் வகிக்கிறது. இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை நாங்கள் முழுமனதோடு வரவேற்றோம். இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றிருக்கிறார். அவரது தேர்தல் வெற்றிகள், உலக அரசியல் அதிசயம் ஆகும்.
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மயத்தில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்தியா முன்னோடியாக விளங்குகிறது. உலக பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளைவிட இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
11 ஒப்பந்தம் கையெழுத்து
இந்த சந்திப்பின்போது, இந்திய தொழிலாளர்களை ஸ்லோவேக்கியாவில் பணியமர்த்துவது, பாதுகாப்பு துறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பரிமாற்றம், உயர்கல்வி- ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு, ஆடியோ-வீடியோ உருவாக்கம், ஸ்லோவேக்கியாவின் கோசிஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் சார்பில் ஏஐ இருக்கை, குவான்டம் கம்யூனிகேஷன், இயற்கை வைத்தியம், இந்திய- ஸ்லோவேக்கிய பல்கலைக்கழங்கள் இடையே ஒத்துழைப்பு, சுற்றுலா, அறிவியல் ஆகியவை தொடர்பாக இரு நாடுகள் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும் தீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்பட உறுதியேற்கப்பட்டது. இதுதொடர்பாக இரு நாடுகள் இடையே சிறப்பு செயல் குழுவை அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாக 3 அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
வந்தே மாதரம் பாடலுடன் வரவேற்பு
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஸ்லோவேக்கியா செல்வது இதுதான் முதல் முறை. அங்கு சென்ற மோடிக்கு, தலைநகர் பிராடிஸ்லாவாவில் பாரம்பரிய முறைப்படி ரொட்டி மற்றும் உப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரொட்டி என்பது செழிப்பையும், உப்பு என்பது மதிப்பு, பாதுகாப்பு மற்றும் நீடித்த நட்பைக் குறிப்பதால், ஸ்லோவேக்கியா வரும் விருந்தினர்களுக்கு ரொட்டி மற்றும் உப்புடன் வரவேற்பு அளிப்பது பாரம்பரிய வழக்கமாக பின்பற்றப்படுகிறது.
ஸ்லோவேக்கியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுராஜ் பிளானர் பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் உள்ளூர் கலைஞர்கள் வந்தே மாதரம் பாடல் பாடியும், நாட்டுப்புற நடனம் ஆடியும் வரவேற்றனர். இது பிரதமர் மோடியை மிகவும் கவர்ந்தது. ஸ்லோவேக்கியா பயணத்தை முடித்துக் கொண்டு, ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் பிரான்ஸ் செல்கிறார்.
100-வது வெளிநாட்டு பயணம்
கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். கடந்த 2019, 2024-ம் ஆண்டு மக்கள வைத் தேர்தல்களில் அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.
முதல் பதவிக் காலத்தில் அவர் 49 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். 2-வது பதவிக் காலத்தில் 27 வெளிநாடுகளுக்கு சென்றார். தற்போது 3-வது பதவிக் காலத்தில் ஸ்லோவேக்கியாவை சேர்த்து இதுவரை 24 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உள்ளார். ஒட்டு மொத்தமாக கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 100 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.
