பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாத சம்பவங்களுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான்கள் தான் காரணம் என்றும் இவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. ஆனால் இதை ஆப்கானிஸ்தான் மறுக்கிறது. இந்த விவகாரம் காரணமாக பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் கடந்த சில வாரங்களாக மோதல் நடைபெறுகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் உட்பட 3 இடங்கள் மீது ஆப்கானிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அவற்றை பாகிஸ்தான் ராணுவம் தகர்த்தது. தலிபான்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி கூறியிருந்தார்.
அதன்படி ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் உள்ள ராணுவ மையங்கள், மலைப்பகுதியில் உள்ள தலிபான் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் ஆகியவற்றை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று விமானம் மூலம் குண்டு வீசியது. தலிபான் தலைவர் ஹிபதுல்லா அகுந்ஜடா ஆகியோர் இருக்கும் காந்தகாரில் உள்ள தொழில்நுட்ப கருவிகள் மையம், கிடங்குகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
காந்தகாரில் ஆப்கன் தலிபான்கள், மற்றும் பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ தலிபான்கள் பயன்படுத்தும் சுரங்கங்கள் மீதும் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. காந்தகாரில் பாகிஸ்தான் போர் விமானங்கள் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக காந்தகார் மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் கூறுகையில், ”காபூல், காந்தகார், பக்திகா ஆகிய இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசின. இதில் பலர் இறந்தனர். காந்தகாரில் போதைப் பொருள் மறுவாழ்வு மையம் மற்றும் காலி கன்டெய்னர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறும் ராணுவ மையங்கள் எல்லாம் வெகு தொலைவில் உள்ளன” என்றார்.
இந்தியா கண்டனம்: ஆப்கன் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆப்கானிஸ்தானில் மக்கள் வசிக்கும் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் மக்கள் பலர் உயிரிழந்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. இது பாகிஸ்தானின் இன்னொரு அத்துமீறல். ஆப்கானிஸ் தானின் இறையாண்மை முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது” என்றார்.














