Home விளையாட்டு செய்திகள் செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்: விஸ்வநாதன் ஆனந்த் கணிப்பு

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்: விஸ்வநாதன் ஆனந்த் கணிப்பு

0

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உஸ்பெகிஸ்தான், இந்தியாவுக்கு சவால் அளிக்கும் என்று 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று இந்திய விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் (எஸ்ஜேஎஃப்ஐ) சார்பில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பாராட்டுப் பத்திரம், பதக்கம் வழங்கி கவுரவிக்கும் விழா நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கே.ஸ்ரீகாந்த், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி.பாஸ் கரன் ஆகியோர் ஆனந்துக்கு பாராட்டு பத்திரம், பதக்கம் வழங்கிப் பாராட்டினர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விஸ்வநாதன் ஆனந்த் கூறியதாவது: வரும் செப்டம்பரில் அடுத்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு சவால் அளிக்கும் விதத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர், வீராங்கனைகள் செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன். கடந்த செஸ் ஒலிம்பியாட்டில் நமது இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

ஒலிம்பியாட் போட்டியைத் தாண்டி, நடப்பு உலக சாம்பியன் குகேஷ்- உஸ்பெகிஸ்தான் ஜவோகிர் சிந்தரோவ் இடையிலான உலக சாம்பியன்ஷிப் மோதல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. போட்டியின்போது வலிமையான ஆட்டத்தை குகேஷ் வெளிப்படுத்துவது போன்ற அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்துடன் (டிஎன்எஸ்ஜேஏ) இணைந்து எஸ்ஜேஎஃப்ஐ நடத்தியது. எஸ்ஜேஎஃப்ஐ தலைவர் சரஜு சக்ரவர்த்தி, செயலர் வி.ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version