ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரி விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் நேற்றுமுன்தினம் கூறியதாவது: கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகள் மீது தடை விதிக்க வகை செய்யும் மசோதாவை உருவாக்க நானும், செனட்டர் ப்ளூமென்தால் உள்ளிட்ட பலரும் பல மாதங்களாக கடுமையாக உழைத்துள்ளோம். பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அதிபர் டொனால்டு ட்ரம்புடனான இன்றைய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதில் ரஷ்யாவுக்கான தடை மசோதா விவாதமும் அடங்கும். அதற்கு ட்ரம்ப் தனது ஒப்புதலை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளை கட்டுப்படுவதற்கான அதிகாரத்தை இந்த புதிய மசோதா வழங்கும். ரஷ்ய அதிபர் புதின் பேச்சில் மட்டுமே வல்லவராக உள்ளார். ஆனால், உண்மையில் அப்பாவி மக்களை கொல்வதை அவர் தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள இந்த மசோதா புதினின் போர் நடவடிக்கைக்கு மறைமுகமாக கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் ஆதரவு அளிக்கும் நாடுகளை தண்டிக்க அதிபர் ட்ரம்புக்கு அதிகமான செல்வாக்கை வழங்கும்.“ரஷ்யாவுக்குத் தடை விதிக்கும் சட்டம் 2025” என்ற மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூடிய விரைவில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு கிரஹாம் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது அமெரிக்கா ஏற்கெனவே 50% வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



