அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது முதலீட்டு ஆலோசகர்கள் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 3,700-க்கும் மேற்பட்ட பங்கு வர்த்தக பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். இதில் பல மில்லியன் டாலர்கள் பரிமாற்றம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்த பங்கு வர்த்தகத்தை அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப, நிதி, ஏரோஸ்பேஸ் மற்றும் ஊடக நிறுவனத்தில் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த விவரத்தை முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப்பின் நிதி முதலீடு குறித்த விவரம் மூலம் இது தெரியவந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதில் ட்ரம்ப் தரப்பில் வாங்கப்பட்ட பங்குகள், விற்கப்பட்ட பங்குகள் விவரம் இடம்பெற்றுள்ளன. அந்த ஆவணம் மொத்தம் நூறு பக்கங்களுக்கு மேல் உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த மதிப்பை கணக்கிடுவதே சவாலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளொன்றுக்கு 40+ என்ற அளவில் 2026-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 3,700-க்கும் மேற்பட்ட பங்கு வர்த்தக பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
“உண்மையில் இது நம்ப முடியாத அளவிலான வர்த்தக பரிமாற்றமாக அமைந்துள்ளது. இந்த முதலீடு ஹெட்ஜ் ஃபண்ட் பாணியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கருதுகிறேன்” என்று டட்டில் கேப்பிட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மேத்யூ டட்டில் தெரிவித்துள்ளார். அவரை போலவே பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் வல்லுநர்களுக்கு இது அதிர்ச்சி தரும் விஷயமாக அமைந்துள்ளது.
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் என்விடியா, ஆரக்கிள், மைக்ரோசாஃப்ட், போயிங், காஸ்ட்கோ உள்ளிட்ட நிறுவனங்களில் சுமார் 1 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை அதிபர் ட்ரம்ப் வாங்கியுள்ளதாக தெரிகிறது.
ஏற்கெனவே அதிபர் ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ கடமைகளை வணிக நலன்களுடன் கலப்பதாக விமர்சகர்கள் குற்றச்சாட்டு வைப்பது உண்டு. இந்த சூழலில் மூன்றே மாத காலத்தில் 3,700 பங்கு வர்த்தக பரிவர்த்தனை என்பது அந்த விமர்சனத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. தனது முதலீடு மற்றும் சொத்துகளை நிர்வகிக்கும் பணியை தனது இரண்டு மகன்களிடம் ட்ரம்ப் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2025 ஜனவரியில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் ஆனார் ட்ரம்ப். அது முதல் கடந்த ஆகஸ்ட் வரையிலான அவரது பங்கு வர்த்தக பரிவர்த்தனையின் எண்ணிக்கை 690 என இருந்துள்ளது. இந்த காலகட்டத்தில் அவர் முதலீடு செய்த தொகை 103.7 மில்லியன் டாலர். கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் மட்டும் 380 பங்கு வர்த்தக பரிவர்த்தனையை அவரது தரப்பு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் அவரது பங்கு வர்த்தக செயல்பாடு கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், “அதிபர் ட்ரம்ப் அமெரிக்க மக்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறார். இதில் முரண்பாடுகள் ஏதும் இல்லை,” என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் முதலீடுகள் அனைத்தும் நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட முறையில் வர்த்தக நிர்வாகத்தில் ட்ரம்ப் அல்லது அவரது குடும்பத்தினர் நேரடியாக முதலீட்டில் ஈடுபடுவதில்லை என ட்ரம்ப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.















