Home விளையாட்டு செய்திகள் திலீப் தோஷி மறைவுக்கு அஞ்சலி!

திலீப் தோஷி மறைவுக்கு அஞ்சலி!

0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளாரான திலீப் தோஷி, மாரடைப்பு காரணமாக நேற்று லண்டனில் காலமானார். 77 வயதான அவர், தனது மனைவி கலிந்தி மகன் நயன், மகள் விசாகா ஆகியோருடன் வசித்து வந்தார்.

பிஷன் சிங் பேடியின் ஓய்வுக்கு பின்னர் 1979-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் திலீப் தோஷி அறிமுகமானார். 1983-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அவர், 33 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 114 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார்.

1981-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் திலீப் தோஷி முக்கிய பங்கு வகித்தார். அந்த போட்டியில் கால் விரலில் முறிவு ஏற்பட்டிருந்த போதிலும் திலீப் தோஷி அபாரமாக செயல்பட்டது அனைவரையும் கவர்ந்திருந்தது.

இங்கிலாந்து கவுண்டி வட்டாரத்திலும் திலீப் தோஷி முக்கிய வீரராக திகழ்ந்தார். அங்கு நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் வார்விக் ஷயர் அணிகளில் 10 வருடங்களுக்கு மேல் விளையாடினார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் திலீப் தோஷி பெங்கால், சவுராஷ்டிரா அணிகளுக்காக விளையாடினார். முதல்தர கிரிக்கெட்டில் அவர், 898 விக்கெட்களை வேட்டையாடினார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் திலீப் தோஷி தனது குடும்பத்துடன் லண்டனுக்கு குடிபெயர்ந்து வெற்றிகரமான தொழில்அதிபராகவும் வலம் வந்தார்.

திலீப் தோஷியின் மறைவுக்கு பிசிசிஐ மற்றும் சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நேற்று தொடங்குவதற்கு முன்னதாக இரு அணி வீரர்களும் திலீப் தோஷியின் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version