Home விளையாட்டு செய்திகள் ‘திறமை அல்ல, இடஒதுக்கீடே காரணம் என்ற விமர்சனத்தை தகர்த்தவர் பவுமா’ – கவாஸ்கர் புகழாரம்

‘திறமை அல்ல, இடஒதுக்கீடே காரணம் என்ற விமர்சனத்தை தகர்த்தவர் பவுமா’ – கவாஸ்கர் புகழாரம்

0

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டர்பனில் தோற்று பிறகு கெபெர்காவில் மீண்டெழுந்து ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்துத் தொடரைச் சமன் செய்த நிலையில் இன்று 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் 2 மணி முதல் நடைபெறும். இந்நிலையில், பேட்டிங், தலைமைத்துவம் என்று அசத்தி வரும் தெம்பா பவுமாவை இந்திய லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

குறிப்பாக இங்கு எப்படி இடஒதுக்கீடு குறித்த ஒரு மேட்டுக்குடி/மேல்சாதியப் பார்வை ‘மெரிட்’ என்ற இனம்புரியா ஒரு வகைமையை வைத்துக் கொண்டு சமூகத்தை காப்பதற்கான அடித்தட்டு மக்களுக்கான இடஒதுக்கீட்டை கேலி பேசி விமர்சித்து வருகின்றனரோ அதே போல் கடந்த தலைமுறை வரைக்கும் வெள்ளை நிறவெறி ஆத்திக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்த கருப்பரின மக்கள் விடுதலை அடைந்த பிறகே, அவர்கள் அரசியல் அதிகாரம் பெற்ற பிறகே ‘சீர்திருத்தச் செயலாக்கம்’ மேற்கொள்ளப்பட்டு அனைத்துத் துறைகளிலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் இடஒதுக்கீடு முறையை அங்குள்ள வெள்ளை/ நிறவெறி/ மேற்குடிக் கும்பல் கிண்டலும் கேலியும் கோபாவேசமும் பேசி விமர்சித்து வருகின்றது.

தென் ஆப்பிரிக்காவில் கிரிக்கெட்டிலும் இட ஒதுக்கீடு முறை உண்டு. அங்கு அது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், இங்கு போலவே சிறு பிரிவினர் அதை எதிர்த்துப் பேசி வருகின்றனர்.

அப்படி உருவானவர்கள்தான் தென் ஆப்பிரிக்க கருப்பரின வீரர்கள். குறிப்பாக மகாயா நிடினி, ஆஷ்வெல் பிரின்ஸ், பிலாண்டர், ரபாடா, லுங்கி இங்கிடி, ஜே.பி.டுமினி இன்னும் பலர். இன்று அந்த வரிசையில் தெம்பா பவுமா. தென் ஆப்பிரிக்காவின் எந்த கேப்டனும் சாதிக்காத வகையில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைக் கூட இழந்ததில்லை என்ற சாதனையை தன்வசம் அவர் வைத்திருக்கிறார்.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றில் சுனில் கவாஸ்கர் எழுதிய பத்தியில் அவரை உயர்த்தி எழுதுவதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்:

“தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்டபோது, வழக்கம்போல அவரது தேர்வு குறித்து ‘இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான தேர்வு, திறமையினால் அல்ல’ என்ற கிசுகிசுப்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், ஆண்டுகள் கடந்த நிலையில், அவர் ஒரு சிறந்த தலைவராகத் தன்னை நிரூபித்துள்ளார்.

கேப்டனாக இருப்பதற்கும் சிறந்த தலைவராக இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு. தனது சொந்த ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு, தன்னை சந்தேகித்தவர்களே தங்கள் கடுமையான விமர்சனங்களைத் திரும்பப் பெறும் நிலையை அவர் உருவாக்கியுள்ளார்.

பவுமா தென் ஆப்பிரிக்காவை வழிநடத்திய 14 டெஸ்ட் போட்டிகளில் 12 வெற்றிகளைப் பெற்றுள்ளார். தொடரின் முதல் டெஸ்டில் மட்டுமே தோல்வியைச் சந்தித்துள்ளார். அவரது இந்தச் சாதனை, அஜிங்க்யா ரஹானேவின் தலைமையின் கீழ் இந்திய அணி ஒருபோதும் டெஸ்ட் போட்டியில் தோல்வியடையாத காலகட்டத்தை நினைவுபடுத்தும் அளவுக்கு சிறப்பானது.

இவர்கள் இருவருமே நெஞ்சை நிமிர்த்தி, நெஞ்சை விடைத்து பாடி லாங்குவேஜ் காட்டுபவர்கள் அல்ல. தாங்கள் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உலகுக்குத் தொடர்ந்து எடுத்துச் சொல்லும் வகையில் பெரிய அளவிலான பொதுவெளி புகழ்பாடும் பிரசாரக் குழுவையும் அவர்கள் வைத்திருக்கவில்லை.

மைதானத்தில் பவுமாவின் அணுகுமுறை, ரசிகர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்ட குண்டப்பா விஸ்வநாத்தை நினைவுபடுத்துகிறது. கடுமையான கிரிக்கெட் வீரராகத் திகழ்வதற்கு ஒவ்வொரு முறையும் எதிரணியினரை நோக்கிக் கூச்சலிடவோ, உலகத்தின் மீது கோபத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தவோ வேண்டிய அவசியமில்லை என்பதை விஸ்வநாத் தனது ஆட்டத்தின் மூலம் காட்டியவர். பவுமாவும் அதே அமைதியான உறுதியை வெளிப்படுத்துகிறார்” இவ்வாறு கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version