இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் இன்று பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி தலா 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இதனால் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3-வது ஆட்டம் வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் இன்று பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றும்.
முதல் 2 போட்டிகளிலும் ரன்கள் வேட்டையாடப்பட்டு இருந்தன. 2-வது போட்டியில் 181 ரன்களை இந்திய அணி துரத்திய நிலையில் திலக் வர்மா, நமன் திர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.
டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் மீண்டும் மட்டையை சுழற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். கடந்த ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார்.
இதனால் வைபவ் சூர்யவன்ஷி இம்முறை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டக்கூடும். பேட்டிங் வலுவாக இருக்கும் நிலையில் பந்து வீச்சு நிலைத்தன்மையுடன் இல்லாதது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நியூஸிலாந்தின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கக்கூடும்.
மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி சொந்த மண்ணில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இதுவரை பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. அதேவேளையில் மிடில் ஆர்டரில் கிளென் பிலிப்ஸ் இரு ஆட்டங்களிலும் அரை சதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டு இருந்தார்.
கடந்த ஆட்டத்தில் அவருக்கு உறுதுணையாக பெவன் ஜேக்கப்ஸும் சிறப்பாகச் செயல்பட்டார். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். பந்துவீச்சில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நியூஸிலாந்து வீரர்கள் உள்ளனர். மேலும் இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் நியூஸிலாந்து அணி தொடரை இழக்க நேரிடும் என்பதால் அந்த அணியின் வீரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட முயற்சிக்கக்கூடும்.
காற்று, குளிர் சவால் அளிக்கும்
நியூஸிலாந்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளபோதிலும், மாலை நேரத்தில் குளிரும் பலத்த காற்றும் வீசி வருகிறது. இன்றைய போட்டி நடைபெறும் ஹென்றி மைதானம் மூன்று பக்கங்களிலும் திறந்தவெளியாக அமைந்துள்ளது. இதனால் பலத்த காற்றும் குளிரும் இருக்கும். இதனால் காற்றின் வேகத்துக்கு தகுந்தவாறு பேட்ஸ்மேன்கள் மட்டையை சுழற்றுவதில் கவனமுடன் செயல்பட வேண்டியது இருக்கும்.
அதேவேளையில் இந்த அனுகூலம் பந்துவீச்சுக்கு சாதகமானதாக அமையும். நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரின் மையப் பகுதியில், மவுண்ட் விக்டோரியா, மவுண்ட் குக் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த மைதானம்.
