உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் ‘தேவபூமி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஷ்ராவண் மாதத்தில் கங்கை நீரை எடுத்துச் செல்வதற்காகக் சுமார் 5 கோடி பக்தர்கள் வருகை தந்தனர். நேற்று முன்தினம் சிவராத்திரி வழிபாட்டுடன் யாத்திரை நிறைவுபெற்றது.
இந்நிலையில், ஹரித்வாரின் கங்கை நதிக்கரைகளிலும் தெருக்களிலும் பெருமளவில் பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தப்பட்ட உடைகள், சிறுநீர் கழித்த பாட்டில்கள் குப்பைகளாக சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக, ஹரித்வாரின் மிக முக்கிய நதிக்கரையான ‘ஹர் கி பவுரி’ பகுதி பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவுகளால் கடுமையாகச் சுகாதாரச் சீர்கேடு அடைந்துள்ளது.
கையுறை, முகக்கவசம் இன்றித் துப்புரவுப் பணியாளர்கள் இவற்றை அள்ளும் வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. கங்கை நீர் சேகரிக்க நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து வரும் பக்தர்கள், புனித நதிக்கரையை இப்படிச் சீரழித்துச் செல்வது துரதிர்ஷ்டவசமானது என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஹரித்வார் மாநகராட்சி ஆணையர் நந்தன் குமார் கூறுகையில், “சிவராத்திரி முடிவடைந்ததும், நதிக்கரைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் சாலைகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் விடிய விடிய ஈடுபட்டனர். இதுவரை 7,000 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன” என்றார்.
ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் மட்டுமல்லாமல், கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரிக்கும் 57,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றுவந்துள்ளனர். பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்ட கங்கோத்ரியிலும் டன் கணக்கில் பிளாஸ்டிக் மற்றும் துணிக் கழிவுகள் வீசப்பட்டுள்ளன. இந்நிலையில், புனிதத் தலங்களின் தூய்மையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் அரசு கடுமையான விதியை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
