அமெரிக்கா – இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அமெரிக்கா, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் பற்றிய கேள்விக்கு ட்ரம்ப் அளித்த பதிலில், “அவர்கள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். நாங்களும் ஒப்பந்தம் செய்யப் போகிறோம். ஒப்பந்தம் இறுதி செய்வதற்கு மிக அருகில் இருக்கிறோம். இதுவரை நாங்கள் செய்த ஒப்பந்தகளில் இருந்து இது மிகவும் வித்தியாசமானதாக இருக்கப் போகிறது” என்றார்.
வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மக்கள் இடையேயான உறவுகள் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தருணத்தில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்கா சென்றிருந்த மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், அந்நாட்டு வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வர்த்தக ஒப்பந்தத்தின் நுணுக்கமான அம்சங்களைப் பற்றி இருவரும் விவாதித்தனர். இதையடுத்து, பியூஷ் கோயல், “இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி இறுதி செய்யப்பட்டு, தற்போது சட்டப்பூர்வ வரைவு தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் செயல்முறையை அரசு விரைவில் நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்” என கூறியிருந்தார்.
