திருநெல்வேலி கவின் கொலை வழக்கு: இளம்பெண்ணின் பெற்றோர் மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

0
25

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ்.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கவின் காதலித்ததாகக் கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். பின்னர் சுர்ஜித் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன், கிருஷ்ண குமாரி, உறவினர் ஜெயபால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.

மனுக்களை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில் நேற்று பிறப்பித்த உத்தரவு:

ஆதாரம், சாட்சி இல்லை

சரவணன், அவரது மனைவி கிருஷ்ணகுமாரி ஆகியோர் கொலைக்குப் பிறகு அவரது மகனை சந்தித்து ஆதாரங்களை அழிக்குமாறு கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நேரில் கண்ட சாட்சிகளும் இல்லை.

முதல் குற்றவாளி, மனுதாரர் மற்றும் மூன்றாம் குற்றவாளி ஆகியோருக்குச் சொந்தமான செல்போன்கள் சம்பவம் நடந்தபோது ஒரே செல்போன் கோபுரத்துடன் இணைக்கப்பட்டிருந்தன என்ற அடிப்படையில் சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டுள்ளது.​

செல்போன் கோபுரத் தகவல்கள் அக்கோபுரத்தின் செயல்பாட்டு வரம்பை மட்டுமே குறிக்கின்றன. செல்போனின் இருப்பிடத்தைக் குறிக்கவில்லை. இரு நபர்கள் ஒருவருக்கொருவர் உடனிருந்தனர் என்பதை செல்போன் கோபுர இருப்பிடத் தகவல்கள் உறுதியாக நிறுவ முடியாது.

அவை அதிகபட்சமாக, ஒரு கூடுதல் ஆதாரமாக மட்டுமே இருக்கும். மனுதாரர்கள் தன் மகளைத்தான் எச்சரித்துள்ளனர். பள்ளிப் பருவத்தில் காதல் அல்லது உறவு முறையில் ஈடுபடும் மகனையோ அல்லது மகளையோ பெற்றோர் கண்டிப்பது இயல்பானதே.

இறந்தவருடன் சரவணன் பேசியதாக போலீஸார் சுட்டிக்காட்டும் செல்போன் உரையாடல் சம்பவ நாளிலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது. இவ்விரண்டுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுவது புலனாய்வு அமைப்பின் அனுமானம் மட்டுமே.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதியபோதுமான ஆதாரம் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமே அவர் மீது வன்கொடுமை வழக்குப் பதிய முடியாது.

கொலைச் செயலில் மனுதாரர்கள் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு இல்லை. சம்பவ இடத்தில் இருந்ததாகவோ, குற்றச்சதி குறித்து அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்றோ குற்றம்சாட்டப்படவில்லை. அரசு தரப்பு சமர்ப்பித்த ஆவணங்கள் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு முரணாக உள்ளது.

எனவே, சாதி ரீதியான குறிப்பு ஏதுமில்லாதது, பொதுவெளியில் குற்றம் நிகழாதது மற்றும் அடிப்படையான குற்றச்செயலில் பங்கேற்பு இல்லாதது ஆகிய காரணங்களால் மனுதாரர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரியை பொருத்தவரை அவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

ஜெயபால் வழக்கைப் பொருத்தவரை இறந்த கவினை ஏற்கெனவே அவர் சந்தித்து காதலைக் கைவிடாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்ததாகவும், அவருடன் 24 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதை பிற சாட்சிகளும் தெரிவித்துள்ளனர்.

கொலைக்குப் பிறகு சுர்ஜித்தின் ஆடைகளை அழித்தல், வாகன எண் பலகையை அகற்றுதல் மற்றும் செல்போனை சேதப்படுத்துதல் ஆகிய செயல்கள் மனுதாரருக்கு சொந்தமான குவாரியில் நடந்துள்ளது. அந்தப்பொருட்கள் குவாரியில் இருந்தே கைப்பற்றப்பட்டுள்ளன.

இதிலிருந்து மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பது தெரிகிறது. எனவே, மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

திருமாவளவன் கோரிக்கை

இதற்கிடையே விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் ‘சரவணன், கிருஷ்ணகுமாரி விடுவிக்கப்பட் டதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here