கிரீன் கார்டு பெறுவதற்கான முக்கிய நடைமுறையான நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில் இருந்து இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ள நிலையில், அந்நாட்டில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும். நாம் இந்தியாவைக் கட்டியெழுப்புவோம் என்று சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அரசு, டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை, நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் திட்டம் (Permanent Labour Certification Programme – PERM) எனப்படும் நடைமுறையில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவில் நிறுவனங்களின் ஆதரவுடன் கிரீன் கார்டு பெறுவதற்கான முக்கிய அம்சமாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது.
இதையடுத்து, அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் நாடு திரும்பி இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும் என்று சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் தர் வேம்பு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்காவின் தொழில்நுட்ப வலிமைக்கு இந்தியர்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். இருப்பினும், அமெரிக்காவின் கணிசமான மக்கள் இனி நம்மை விரும்பவில்லை.
அமெரிக்காவில் விசா மூலம் வசிப்பவர்கள், தங்களது கடின உழைப்பால் உருவாக்கிய வாழ்க்கையை விட்டுவிட்டு வேறு இடத்துக்குச் செல்லவேண்டிய வேதனையான சூழலை எதிர்கொள்கின்றனர். ஒரு துணிச்சலான புதிய எதிர்காலம் பிறப்பதற்கான வேதனையாக இதைக் கருதுவோம். திரும்பி வாருங்கள், நாம் இந்தியாவைக் கட்டியெழுப்புவோம். அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கு இதுவே சரியான தருணாம்” என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தொழிலாளர் துறை அமைச்சர் கீத் சோண்டர்லிங் கூறுகையில், “டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் விண்ணப்பங்களை நாங்கள் ஏற்க மாட்டோம். ஏற்கனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
