Home தேசிய செய்திகள் ‘பாஷிம் பங்கா’ ஆகிறது மேற்கு வங்கம்: முதல்வர் சுவேந்து அதிகாரி தகவல்

‘பாஷிம் பங்கா’ ஆகிறது மேற்கு வங்கம்: முதல்வர் சுவேந்து அதிகாரி தகவல்

0

மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயர் ‘பாஷிம் பங்கா’ என மாற்றப்படும் என தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி, இதற்கான ஒப்புதலை மாநில அமைச்சரவை வழங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள மாநில செயலகத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, “ஆங்கிலத்திலும் இனி மேற்கு வங்கம் என்பதற்குப் பதிலாக, பாஷிம் பங்கா (Paschim Banga) என்றே அழைக்கப்படும். இதை அப்படியேதான் எழுத வேண்டும். இதற்கான தீர்மானம் வரும் 9-ம் தேதி சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும். அதன்பிறகு, மத்திய அரசுக்கும் பின்னர் நாடாளுமன்றத்துக்கும் அனுப்பப்படும்.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு விஷயம். 1947-ல் மேற்கு வங்கம் உருவான வரலாற்றுச் சூழலோடு இது பிணைந்துள்ளது. இந்த மாற்றம் அவசியமானது” என்றார்.

மேற்கு வங்கத்தின் பெயரை பாஷிம் பங்கா அல்லது பாஷிம் பங்கோ என மாற்ற 2011-ல் முன்மொழியப்பட்டது. ஆனால், அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதன் பிறகு, 2016 முதல் 2018 வரையிலான காலத்தில், அப்போதைய திரிணமூல் காங்கிரஸ் அரசு, மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்ற முன்மொழிந்தது. இருந்தும், அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மேலும் கூறுகையில், “அரசாங்கத்தில் ஒரு லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தும் இலக்கின் ஒரு பகுதியாக, மாநிலத்தின் பல்வேறு துறைகளில் 10,146 பணியிடங்களை நிரப்ப அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், வேலைவாய்ப்புத் தேர்வுகளில் பங்கேற்கும் வேலையில்லாத விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை மாநில அரசே ஏற்கும். எனவே, இனி விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் இருக்காது.

கோகுல் மிஷன் ஆதரவு திட்டத்தின் கீழ் பசு பாதுகாப்பு இல்லங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். மேற்கு வங்கச் சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கும். இந்த கூட்டத்தொடரில் 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன” என தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version