“சினிமா விமர்சனங்கள் பலவும் தனிப்பட்ட தாக்குதல்களாக மாறி போகின்றன, இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று இயக்குநர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்
2024-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. சிதம்பரம் இயக்கத்தில் வெளியான இப்படத்துக்கு தமிழிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. பல திரையரங்குகளில் 2024-ம் ஆண்டு அதிக டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 படங்கள் பட்டியலில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பல்வேறு இயக்குநர்களுடன் இணைந்து பேட்டியொன்று அளித்துள்ளார் இயக்குநர் சிதம்பரம். அதில் படங்களின் விமர்சனங்கள் குறித்து “சினிமா விமர்சனங்கள் சமீபத்தில் தோன்றியவை அல்ல. மூன்று நாட்கள் முன்பு, 1940-களில் வெளிவந்த ‘பாலன்’ திரைப்படம் குறித்து ஒரு செய்திக் கட்டுரை பார்த்தேன். அதில் ஒளிப்பதிவு பற்றிய குறைகள் மற்றும் கேரளாவின் இயற்கை அழகு குறைவாக உள்ளதாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.
சினிமாவின் ஆரம்ப காலங்களிலிருந்தே விமர்சனங்கள் இருந்துள்ளன. சமூக ஊடகங்களில், விமர்சனத்தின் ஸ்டைல்தான் முக்கியமாக கவர்கிறது. பார்வையாளர்கள் சிறிது டாக்சிக் கருத்துகளை விரும்புவது போல் தெரிகிறது. ஒரு திரைப்படம் வெளியானதும், அது பொதுவெளியில் வைக்கப்படுகிறது அதுகுறித்து யாரும் தங்கள் கருத்துகளை பகிரலாம்.
இருப்பினும், பல விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்களாக மாறி போகின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. கலை நல்ல விதமாகவோ, மோசமாகவோ மிகக் கடுமையாக விமர்சிக்கப்படலாம். ஆனால் அதில் உள்ள உழைப்பு எப்போதும் மதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் சிதம்பரம்.