“ஆறுகளில் நுரை பொங்க சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் கா

0
24

 “ஆறுகளில் நுரை பொங்குவதற்கு  சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம்” என்று தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் ராஜீவ் கொடுத்த விளக்கம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

முன்னதாக நேற்று திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை அமைச்சர் ராஜீவ் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மழைக் காலங்களில் மட்டும் ஆற்றில் தண்ணீர் அதிகமாக போகும்போது அதிகளவில் நுரை பொங்குகிறது. மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு நிறைந்த தண்ணீர் ஆற்றில் கலக்கும் போதும் நுரை ஏற்படுகிறது.

அதே வேளையில், மழையைப் பயன்படுத்திக் கொண்டு சாயப் பட்டறைகள் மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் ஆற்றில் திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தவெக ஆட்சியில் அதிகாரிகள் இரவு பகல் பாராமல் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் ஆலை மூடல் போன்ற நடவடிக்கைகள் பாயும்” என்று பேசியிருந்தார்.

அவரது இந்த விளக்கம் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

நகைச்சுவை வேண்டாம்; நடவடிக்கை தேவை:

இந்நிலையில் அமைச்சர் ராஜீவ் ஆறுகளில் நுரை பொங்க சோப்பு, ஷாம்பு தான் காரணம் எனக் கூறியதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூட, “திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர்,  திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று  பாராட்டியது மட்டுமின்றி,   சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார். அதை வைத்து பார்க்கும் போது தான் அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற ஐயம் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.  இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு  சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து  ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்த போது, எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜீவ், “எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணம் அல்ல. மனிதக் கழிவுகள் உள்பட கழிவு நீர் கலப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம். தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்ததே மீன்கள் இறப்பிற்கு முதன்மைக் காரணம்; இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here