உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் கும்பமேளா நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த விழா, மகா கும்பமேளாவாக நடத்தப்படுகிறது.
ஜனவரி 13-ல் தொடங்கும் மகா கும்பமேளாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதற்கு முன்பு கடந்த2019 கும்பமேளா விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
தற்போது உ.பி. அரசு நடத்தும் மகா கும்பமேளா ஏற்பாடுகளை முதல் முறையாக பிரதமரே தொடங்கி வைக்கிறார். முதல்வர் ஆதித்யநாத் கலச கும்பத்தை பிரதமர் மோடியிடம் கொடுக்க உள்ளார். பண்டிதர் தீப்பு மிஸ்ரா தலைமையில் 7 முக்கிய மூத்த அர்ச்சகர்கள் இதற்கான பூஜைகளை நடத்துகின்றனர். இதில் உலக அமைதிக்காகவும், மகா கும்பமேளா சிறப்பாக நடைபெறவும் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்வார்.
மகா கும்பமேளாவை புண்ணிய விழாவாக சர்வதேச அளவில் பிரபலப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆர்வமாக உள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டு மகா கும்பமேளாவுக்கு மாநில அரசுடன் மத்திய அரசும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. கலச கும்ப பூஜையில் அனைத்து அகாடாக்களின் தலைவர்கள், முக்கிய துறவிகள் மற்றும் மடாதிபதிகள் பங்கேற்கின்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.