மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக புதிய வழக்குகளை பதிவு செய்யக்கூடாது, விசாரணை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் 1991-ம் ஆண்டு மத வழிபாட்டு தலங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டுத் தலங்கள் மீது யாரும் உரிமை கோர முடியாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பாஜக மூத்த தலைவர்கள் அஸ்வினி உபாத்யாயா, சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனிடையே மத வழிபாட்டு தலங்கள் சட்டத்துக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட், முஸ்லிம் லீக், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தனிநபர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், விஸ்வநாதன் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு கூறியதாவது: மத வழிபாட்டு தலங்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசின் ஆலோசகராக மூத்த வழக்கறிஞர் கனு அகர்வாலும், சட்டத்தை எதிர்க்கும் மனுதாரர்களின் ஆலோசகராக விஷ்ணு சங்கரும், சட்டத்தை ஆதரிக்கும் மனுதாரர்களின் ஆலோசகராக இஜாஸ் மெக்பூலும் நியமிக்கப்படுகின்றனர்.
உத்தர பிரதேசம், வாராணசியில் உள்ள கியான்வாபி மசூதி, உத்தர பிரதேசத்தின் மதுராவில் உள்ள ஷாயி ஈத்கா மசூதி (கிருஷ்ண ஜென்ம பூமி) தொடர்பான இரு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவை தவிர நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் மதவழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 10 வழக்குகள் மசூதி தொடர்பானவை.
மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு 4 வாரங்களுக்குள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த பதில் மனு இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து படிக்க வகை செய்ய வேண்டும்.
தற்போதைய வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, அனைத்து நீதிமன்றங்களிலும் மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக புதிய வழக்குகளை பதிவு செய்யக்கூடாது, விசாரணை நடத்தக்கூடாது. எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கக்கூடாது. ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டாலும் அதை பதிவு செய்யக்கூடாது. இவ்வாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
மதவழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் தற்போது நடைபெற்று வரும் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று நேற்றைய விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த கோரிக்கையை தலைமை நீதிபதி அமர்வு ஏற்கவில்லை.