இலங்கையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இன்று மூன்று நாள் பயிற்சி ஆட்டம் தொடங்கியுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் லெவன் முதலில் பேட் செய்து வருகிறது. ஷுப்மன் கில்லுக்கு விரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுகிறார்.
இலங்கை-இந்திய டெஸ்ட் போட்டித் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் இரு அணிகளுக்குமே இது வெற்றி பெற வேண்டிய தொடர் ஆகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்திய அணி 5-ம் இடத்தில், இலங்கையை விட ஒரு இடம் முன்னிலையில் உள்ளது. எனவே தொடரை வெல்வது இரு அணிகளுக்குமே இன்றியமையாதது.
இலங்கை பிட்ச்கள் வழக்கமாக முதல் நாளிலிருந்தே பந்துகள் தாறுமாறாகத் திரும்பும் ஸ்பின் பிட்ச்கள்தான். இந்த முறை வேறு மாதிரி இருக்க வாய்ப்பில்லை. அதனால் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அதிகளவிலான பந்துவீச்சு அனுபவத்தையும், பல்வேறு வகையான ஆடுகள அனுபவத்தையும் வழங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், பயிற்சிக்காக வழக்கமாக பயன்படுத்தப்படும் பாரம்பரிய ஆடுகளங்களை முற்றிலுமாக கைவிட்டு, நேரடியாக குழிப்பிட்ச்சில் பயிற்சி செய்ய வீரர்களைப் பணித்தனர்.
இலங்கையின் காலே மைதானத்தில் போட்டியின் நான்காவது நாளில் காணப்படும் கணிக்க முடியாத, சீரற்ற தன்மையுடைய ஆடுகளத்தை ஒத்திருக்கும் வகையில், அவர்கள் அளவுகோலை பயன்படுத்தி பராமரிக்கப்படாத புல்வெளியின் மீது 22 யார்டு நீளத்தில் புதிய பயிற்சி ஆடுகளத்தை அமைத்தனர். அந்தப் பகுதியில் சமமற்ற புல் திட்டுகள், இயற்கையாக உருவான விரிசல்கள் மற்றும் தளர்வான மண் ஆகியவை அப்படியே விடப்பட்டிருந்தன.
அந்த தற்காலிக ஆடுகளத்தில் பள்ளி மாணவர்களான இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் சிலர் உடனடியாக களமிறக்கப்பட்டனர். எந்தக் கட்டுப்பாடுமின்றி முழு வீச்சில் பந்துவீசுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் விளைவு உடனடியாக வெளிப்பட்டது.
உயரமான உடலமைப்பு அடைய ஒரு இளம் ஆஃப்-ஸ்பின்னர் வீசிய ஒரு பந்து, புல்லில் பட்டவுடன் திடீரென அதிகமாகத் திரும்பி எதிர்பாராத உயரத்திற்கு எழுந்தது. மற்றொரு பந்து பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டின் முகக் கம்பி (கிரில்) அருகே வேகமாகச் சென்றது. அடுத்த பந்து தரையில் தாழ்வாக வழுக்கிச் சென்று மட்டைக்குக் கீழே புகுந்தது.
ஆனால், இம்மாதிரியான விநோதப் பயிற்சி முறைகள் பேட்டர்களின் டெக்னிக்கை வளர்க்காமல் நிகழ் நேர டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதாரணப் பந்தைக் கூட ஏதோ ஆபத்து நிறைந்தப் பந்தாகக் கருதி தேவையில்லாமல் எச்சரிக்கையாக ஆடி ஆட்டமிழப்பதில்தான் போய் முடியும் என்பது தேர்ந்த பயிற்சியாளர்களுக்குத் தெரியும்.
ஏனெனில், இந்திய அணி நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளிடம் உள்நாட்டில் வாங்கிய உதையிலும் கூட பந்துகள் தாறுமாறாகவெல்லாம் வரவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 118 ரன்களைக் கூட சேஸ் செய்ய முடியாமல் தோற்றது நடப்பு பேட்டர்களின் ஸ்பின் பந்து ஆடும் அனுபவமும் முதிர்ச்சியும் இல்லாமையே.
முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்பின் ஆடும் உத்தியை நன்றாகப் பயில வேண்டும், அப்படிப் பயின்று விட்டால் இது போன்ற தாறுமாறான பிட்ச்களில் கைகொடுக்கும். அதை விடுத்து தாறுமாறான பிட்ச்களிலேயே பயிற்சி செய்து விட்டால் அப்படிப்பட்ட பிட்ச்களில் நிகழ்நேரத்தில் ஆடி விட முடியும் என்பது மாபெரும் கற்பனையே. சாதாரண பந்துகளிலேயே ஆட்டமிழப்பதுதான் நடக்கும்.
கம்பீர் போன்ற அனுபவமற்ற பயிற்சியாளருக்கு யாராவது இதையெல்லாம் எடுத்துரைத்தால் நல்லது என்றே தோன்றுகிறது.















