“மது இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பயணிக்க வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாமக ஆதரவு வழங்கும்” என்று அக்கட்சித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. முழு மது விலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலம் என்ற உன்னத இலக்கை நோக்கிய தமிழ்நாட்டின் பயணத்திற்கு நம்பிக்கையளிக்கும் தொடக்கமாக இது அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் விவாதித்த விஜய், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக் கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை மூட ஆணையிட்டதாகவும், அடுத்த இரு வாரங்களில் இந்தக் கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 4,765-ல் இருந்து 4,048 ஆக குறையும். உண்மையாகவே இது மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை தான். தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின்னர் வெளியிடப்பட்ட மூன்று அறிவிப்புகளை வரவேற்று அறிக்கை வெளியிட்ட நான், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
முதல்வர் நேற்று என்னை சந்தித்த போதும் இதே கோரிக்கையை வலியுறுத்தினேன். சேலம் சீல நாயக்கன்பட்டி அருகில் ஒரு மாணவனை சக மாணவர்கள் மது போதையில் குத்தி படுகொலை செய்தது தொடர்பான அறிக்கையிலும் இதை வலியுறுத்தியிருந்தேன். மது போதையை ஒழிக்க வேண்டியதன் தேவையை முதல்வர் உணர்ந்து மதுக்கடைகளை மூட ஆணையிட்டுள்ளார். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் 8,000-க்கும் கூடுதலாக இருந்த மதுக் கடைகளின் எண்ணிக்கையை அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களின் வாயிலாக பாதியாக குறைக்கச் செய்த பாமக, இந்த நடவடிக்கையால் மேலும் மகிழ்ச்சியடைகிறது; பெருமிதம் கொள்கிறது.
ஒரு மாணவன் பள்ளிக்கு செல்ல ஒன்று முதல் 2 கி.மீ பயணிக்க நேரிடும் போது, குறைந்தது இரு மதுக் கடைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. மாணவர்களுக்கு கைக்கெட்டும் தொலைவில் மது கிடைப்பது தான் அவர்கள் மதுவுக்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும். இதைத் தடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும். தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கும், சட்டம்- ஒழுங்கை நிலை நிறுத்தவும் இந்த துணிச்சலான நடவடிக்கை பயனளிக்கும். இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சமூக நீதி வழங்க முடியும்.
அதே நேரத்தில் தமிழகத்தின் மூலை முடுக்குகள் வரை பரவியுள்ள மது வணிகக் கட்டமைப்பை தகர்க்க இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதல்ல. தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 4,765 மதுக்கடைகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக கூறப்பட்டாலும், அவற்றைக் கடந்து மாநிலம் முழுவதும் சந்துக் கடைகள் என்ற பெயரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்ட விரோத மதுக் கடைகள் செயப்பட்டு வருகின்றன. இவை தவிர மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் 1500-க்கும் மேற்பட்ட மதுக் குடிப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஒருவர் நினைத்தால் அடுத்த 2 நிமிடங்களில் மதுவை வாங்கிக் குடிக்க இந்தக் கட்டமைப்பு தான் காரணமாக உள்ளது. சந்துக் கடைகளும், மனமகிழ் மன்றங்களும் மூடப்படாவிட்டால், எந்த நோக்கத்திற்காக 717 மதுக் கடைகளை மூட முதல்வர் ஆணையிட்டாரோ, அந்த நோக்கத்தை அடைய முடியாது என்பது திண்ணம்.
மது போதையின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட வேண்டும். மதுவுக்கு அடிமையான இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் அதில் இருந்து மீட்காவிட்டால், அவர்கள் வெகு தூரம் பயணித்து சென்றாவது மதுவைக் குடிக்கத் துடிப்பார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க வட்ட மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அதேபோல், மதுக்கடைகள் இல்லாத பகுதிகளில் கள்ளச் சாராயம் தலை தூக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது.
மது மற்றும் போதையில்லாத தமிழ்நாடு அமைக்கப்பட்டால், அதை விட பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு அளிக்க முடியாது. அந்த இலக்கை நோக்கி முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பயணிக்க வேண்டும். அதற்கான அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாமக முழுமையான ஆதரவை வழங்கும்” என்று அன்புமணி கூறியுள்ளார்.
