இந்திய அணி 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது: இலங்கை அணி தடுமாற்றம் | கொழும்பு டெஸ்ட்

0
21

இலங்கை அணிக்கு எதி​ரான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 503 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. துருவ் ஜூரெல் 115 ரன்​களும், ரிஷப் பந்த் 63 ரன்​களும் விளாசி அசத்​தினர். இதையடுத்து விளை​யாடிய இலங்கை அணி 8 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்​தது.

கொழும்பு நகரில் உள்ள சிங்​களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் டாஸ் வென்று பேட் செய்த இந்​திய அணி முதல் நாள் ஆட்​டத்​தில் 85 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 300 ரன்​கள் எடுத்​தது. தேவ்​தத் படிக்​கல் 117, ஷுப்​மன் கில் 50, யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 45, ரவீந்​திர ஜடேஜா 43, கே.எல்​.​ராகுல் 18 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர்.

துருவ் ஜூரெல் 7, சரண்ஷ் ஜெயின் 4 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது. சரண்ஷ் ஜெயின் 6 ரன்​கள் எடுத்த நிலை​யில் அசிதா பெர்​னாண்டோ பந்​தில், 2-வது சிலிப் திசை​யில் கமில் மிஷா​ரா​வின் அபார​மான கேட்ச் காரண​மாக ஆட்​ட​மிழந்​தார்.

இதையடுத்து முதல் நாள் ஆட்​டத்​தில் காயம் காரண​மாக ‘ரிட்​டயர்டு ஹர்ட்’ முறை​யில் வெளி​யேறி இருந்த ரிஷப்​பந்த் களமிறங்​கி​னார். அதிரடி​யாக விளை​யாடிய ரிஷப் பந்த் 81 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் தனது 21-வது அரை சதத்தை கடந்​தார். இந்த ஜோடி​யின் சிறப்​பான ஆட்​டத்​தால் இந்​திய அணி 110-வது ஓவரில் 400 ரன்​களை கடந்​தது.

மதிய உணவு இடைவேளை​யில் இந்​திய அணி 112 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 419 ரன்​கள் எடுத்​திருந்​தது. ரிஷப் பந்த் 63, துருவ் ஜூரெல் 59 ரன்​கள் சேர்த்து இருந்​தனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்​னர் கேஷரா நுவந்தா வீசிய முதல் பந்​தில் ரிஷப் பந்த் ஆட்​ட​மிழந்​தார்.

ரிஷப் பந்த் விளாசிய பந்து லாங் ஆஃப் திசை​யில் லகிரு உதரா​விடம் கேட்ச் ஆனது. ரிஷப் பந்த் 89 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​கள் சேர்த்​தார். 7-வது விக்​கெட்​டுக்கு ரிஷப் பந்த், துருவ் ஜூரெல் ஜோடி 112 ரன்​கள் குவித்​தது.

இதையடுத்து களமிறங்​கிய மானவ் சுதார் 18 ரன்​களில் பிர​பாத் ஜெயசூரியா பந்​தில் நடையை கட்​டி​னார். இந்​திய அணி 131.2 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 475 ரன்​கள் எடுத்​திருந்த போது மழை குறுக்​கிட்​டது. இதனால் வழக்​க​மான நேரத்​தை​விட முன்​ன​தாகவே தேநீர் இடைவேளை அறிவிக்​கப்​பட்​டது. மழை நின்ற பின்​னர் மாலை 4.30 மணிக்கு மீண்​டும் ஆட்​டம் தொடங்​கப்​பட்​டது.

சீராக ரன்​கள் சேர்த்த துருவ் ஜூரெல் 171 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் சதம் விளாசி​னார். டெஸ்ட் அரங்​கில் இது அவரது 2-வது சதமாக அமைந்​தது. அவருக்கு உறு​துணை​யாக தடுப்​பாட்​டம் மேற்​கொண்ட முகமது சிராஜ் 29 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 3 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிர​பாத் ஜெயசூரியா பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். இந்​திய அணி 138 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 503 ரன்​கள் குவித்த நிலை​யில் முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​தது.

துருவ் ஜூரெல் 177 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 115 ரன்​களும், பிரசித் கிருஷ்ணா 4 ரன்​களு​ட​னும் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். இலங்கை அணி தரப்​பில் அசிதா பெர்​னாண்டோ 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். பிர​பாத் ஜெயசூரி​யா, கேஷரா நுவந்தா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி தொடக்​கத்​திலேயே ஆட்​டம் கண்​டது.

லகிரு குமாரா 1 ரன் எடுத்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​து​வீச்​சில் ஆட்​ட​மிழந்​தார். ஆஃப் ஸ்டெம்ப் நோக்கி வந்த பந்தை லகிரு குமாரா தடுப்​பாட்​டம் மேற்​கொண்ட போது பந்து மட்டை விளிம்​பில் பட்டு 3-வது சிலிப் திசையை நோக்கி பாய்ந்​தது. அங்கு தயா​ராக நின்ற யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் இடது புறம் பாய்ந்து கேட்ச் செய்து மிரளச் செய்​தார்.

இதையடுத்து களமிறங்​கிய பிர​பாத் ஜெயசூரியா 2 ரன்​கள் எடுத்த நிலை​யில் மானவ் சுதார் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் இலங்கை அணி 3 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 8 ரன்​கள் எடுத்​தது. கமில் மிஷாரா 5 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் களத்​தில் இருந்​தார். கைவசம் 8 விக்​கெட்​கள் இருக்க 495 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் இன்​று 3-வது நாள்​ ஆட்​டத்​தை சந்​திக்​கிறது இலங்​கை அணி.

‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் துருவ் ஜூரெல் சதம் விளாசி அசத்தினார். சதம் அடித்ததும் ஜூரெல், தனது கையில் குத்தப்பட்டிருந்த ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற டாட்டூவை பெருமையுடன் வெளிப்படுத்திக் கொண்டாடினார்.

போட்டி முடிவடைந்ததும் இதுகுறித்து துருவ் ஜூரெல் கூறும்போது, “எனது தந்தை நாட்டின் எல்லை காக்கும் ராணுவ வீரர், எனது தாத்தா நிலத்தில் பாடுபட்ட ஒரு விவசாயி. எனது வேர்களையும், குடும்பத்தின் பாரம்பரியத்தையும் என்றும் நினைவில் கொள்ளவே இந்த ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற வரிகளைக் கையில் டாட்டூவாகக் குத்திக் கொண்டேன். இது அவர்களுக்கு நான் செலுத்தும் மரியாதை” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here