இலங்கை அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. துருவ் ஜூரெல் 115 ரன்களும், ரிஷப் பந்த் 63 ரன்களும் விளாசி அசத்தினர். இதையடுத்து விளையாடிய இலங்கை அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.
கொழும்பு நகரில் உள்ள சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 85 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. தேவ்தத் படிக்கல் 117, ஷுப்மன் கில் 50, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45, ரவீந்திர ஜடேஜா 43, கே.எல்.ராகுல் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
துருவ் ஜூரெல் 7, சரண்ஷ் ஜெயின் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. சரண்ஷ் ஜெயின் 6 ரன்கள் எடுத்த நிலையில் அசிதா பெர்னாண்டோ பந்தில், 2-வது சிலிப் திசையில் கமில் மிஷாராவின் அபாரமான கேட்ச் காரணமாக ஆட்டமிழந்தார்.
இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தில் காயம் காரணமாக ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறி இருந்த ரிஷப்பந்த் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 81 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் தனது 21-வது அரை சதத்தை கடந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 110-வது ஓவரில் 400 ரன்களை கடந்தது.
மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 112 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 419 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 63, துருவ் ஜூரெல் 59 ரன்கள் சேர்த்து இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் கேஷரா நுவந்தா வீசிய முதல் பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார்.
ரிஷப் பந்த் விளாசிய பந்து லாங் ஆஃப் திசையில் லகிரு உதராவிடம் கேட்ச் ஆனது. ரிஷப் பந்த் 89 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்தார். 7-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த், துருவ் ஜூரெல் ஜோடி 112 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மானவ் சுதார் 18 ரன்களில் பிரபாத் ஜெயசூரியா பந்தில் நடையை கட்டினார். இந்திய அணி 131.2 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் வழக்கமான நேரத்தைவிட முன்னதாகவே தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் மாலை 4.30 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டது.
சீராக ரன்கள் சேர்த்த துருவ் ஜூரெல் 171 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். டெஸ்ட் அரங்கில் இது அவரது 2-வது சதமாக அமைந்தது. அவருக்கு உறுதுணையாக தடுப்பாட்டம் மேற்கொண்ட முகமது சிராஜ் 29 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 3 ரன்கள் எடுத்த நிலையில் பிரபாத் ஜெயசூரியா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இந்திய அணி 138 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 503 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
துருவ் ஜூரெல் 177 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 115 ரன்களும், பிரசித் கிருஷ்ணா 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்களை வீழ்த்தினார். பிரபாத் ஜெயசூரியா, கேஷரா நுவந்தா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது.
லகிரு குமாரா 1 ரன் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டெம்ப் நோக்கி வந்த பந்தை லகிரு குமாரா தடுப்பாட்டம் மேற்கொண்ட போது பந்து மட்டை விளிம்பில் பட்டு 3-வது சிலிப் திசையை நோக்கி பாய்ந்தது. அங்கு தயாராக நின்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடது புறம் பாய்ந்து கேட்ச் செய்து மிரளச் செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய பிரபாத் ஜெயசூரியா 2 ரன்கள் எடுத்த நிலையில் மானவ் சுதார் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்தது. கமில் மிஷாரா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 495 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை சந்திக்கிறது இலங்கை அணி.
‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் துருவ் ஜூரெல் சதம் விளாசி அசத்தினார். சதம் அடித்ததும் ஜூரெல், தனது கையில் குத்தப்பட்டிருந்த ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற டாட்டூவை பெருமையுடன் வெளிப்படுத்திக் கொண்டாடினார்.
போட்டி முடிவடைந்ததும் இதுகுறித்து துருவ் ஜூரெல் கூறும்போது, “எனது தந்தை நாட்டின் எல்லை காக்கும் ராணுவ வீரர், எனது தாத்தா நிலத்தில் பாடுபட்ட ஒரு விவசாயி. எனது வேர்களையும், குடும்பத்தின் பாரம்பரியத்தையும் என்றும் நினைவில் கொள்ளவே இந்த ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற வரிகளைக் கையில் டாட்டூவாகக் குத்திக் கொண்டேன். இது அவர்களுக்கு நான் செலுத்தும் மரியாதை” என்றார்.
