கணிதம் மற்றும் அறிவியல் துறையை தேர்வு செய்து படிப்பதற்கும், அதில் ஆய்வுகளை மேற்கொள்ளவும் மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டுமென விண்வெளி அறிவியல் ஆய்வு மாநாட்டில் விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சொசைட்டி (டாஸ்), தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சென்னை கணித அறிவியல் நிறுவனம், ராமன் ஆராய்ச்சி பவுண்டேஷன், பெங்களூரில் உள்ள இந்திய வான் இயற்பியல் நிறுவனம் ஆகியவை சாா்பில், இளைஞருக்கான வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆய்வு மாநாடு (ஒய்ஏஎஸ்எஸ்சி- 2025) சென்னை தரமணியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. கல்லூரி மாணவா்களுக்கு வானவியல் ஆய்வுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளை சோ்ந்த பேராசிரியா்கள், மாணவர்கள், அறிவியலாளர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் வானவியல் தொடா்பான புத்தகங்கள், போஸ்டா்கள் வெளியிடப்பட்டன. இதுதவிர மாணவா்கள் கைகளால் செய்து பாா்க்கக்கூடிய வானவியல் தொடா்பான ஆய்வுப் பொருள்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதேபோல், தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு விண்வெளி அறிவியலின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.
ஒட்டுமொத்தமாக கணிதம் மற்றும் அறிவியல் துறையை தேர்வுசெய்து படிப்பதற்கும், அதில் ஆய்வுகளை மேற்கொள்ளவும் மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டுமென மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மேலும், வானவியல் ஆய்வு குறித்த பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
கணித அறிவியல் நிறுவனத்தின் இயக்குநா் ரவீந்திரன் பேசுகையில், ‘‘இன்றைய கல்லூரி மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கு இத்தகைய முன்னெடுப்புகள், வானியல் விண்வெளி அறிவியல் அமர்வுகள் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
குறிப்பாக அவர்களின் அடுத்தகட்ட படிப்புகளை தேர்வு செய்ய இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் அதிக வாய்ப்பை வழங்கும். இதை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வாழ்க்கையிலும், சமூக மாற்றத்துக்கும் உதவ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
அதேபோல், 2-ம் நாளில் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் துறையில் மாணவர்கள் எந்த மாதிரியான ஆய்வுகளை செய்யலாம் என இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் செயல் விளக்கம் வழங்கினார். இந்நிகழ்வில் இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் விஞ்ஞானி நீருஜ் மோகன் ராமானுஜம், டாஸ் அமைப்பின் தலைவர் ஜி.ரமேஷ், பொதுச்செயலாளர் ஜெ.மனோகர், அறிவியல் பலகை ஒருங்கிணைப்பாளர் பி.ஸ்ரீகுமார் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.