தமிழகத்தில் 12,525 ஊராட்சிகளிலும் திடக்கழிவு விழிப்புணர்வு பாடல்: அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார்

0
32

வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வு பாடலை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

தூய்மை பாரத இயக்கத்தை தமிழகத்தில் மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, வீடு, வீடாக சென்று பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிப்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கவும், திடக்கழிவுகளை அவரவர் இல்லத்திலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து அப்புறப்படுத்துவதற்காக உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் ஒலிபரப்ப திடக்கழிவு விழிப்புணர்வு குறித்த பாடல் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 கோடியே 25 லட்சம் ஊரக குடியிருப்புகளில் 84 ஆயிரத்து 651 பணியாளர்கள் குப்பை சேகரித்து தரம் வாரியாக பிரிப்பதற்காக பணியாற்றுகின்றனர். இதற்காக 8,315 மின்கல வாகனங்கள் மற்றும் 1,291 டிராக்டர்கள், 372 பிற வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அனைத்து ஊராட்சிகளிலும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் ஒலிபரப்பிட வசதியாக இந்தப் பாடலை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் இப்பாடல் ஒலிபரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here