மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமனத்துக்கு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு பணி நியமனங்கள் நடைபெற்றன. இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாகவும், தலா ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள், அலுவலர்கள் உட்பட 25,753 பேரின் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் வேலை பறிபோனாலும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பலர் மீண்டும் பள்ளிக்கு வந்து பணிபுரிகின்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் பலர் கூறும்போது, ‘‘நாங்கள் வேலை செய்த பள்ளிகள் தற்போது ஆசிரியர்கள், அலுவலர்கள் இல்லாமல் சிக்கலில் உள்ளன.
குறிப்பாக தற்போது தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே, பள்ளிகளில் பணிகளை செய்வதற்கு ஆட்கள் இல்லாமல் நிர்வாகங்கள் திணறுகின்றன. எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாங்கள் பணிக்கு வருகிறோம். நாங்கள் குற்றம் செய்யாத போது எங்களை ஏன் தண்டிக்க வேண்டும்?’’ என்று வருத்தத்துடன் கூறினர்.