இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது: மத்திய கல்வி இணை அமைச்சர்

0
449

இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சென்னை ஐஐடியில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கவிழாவில் மத்திய கல்வி இணை அமைச்சர் சுகாந்தோ மஜும்தார் பாராட்டு தெரிவித்தார்.

சென்னை ஐஐடி-யில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான 2 நாள் தொழில்நுட்ப கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை மத்திய கல்வி இணை அமைச்சர் சுகாந்தோ மஜும்தார் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுமை கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் சென்னை ஐஐடி தொடர்ந்து தலைசிறந்து விளங்கி வருகிறது. தேசிய அளவில் சிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் (என்ஐஆர்எப் ரேங்க்) சென்னை ஐஐடி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து வருகிறது. அந்த வகையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான தொழில்நுட்பக் கண்காட்சி இங்கு நடத்தப்படுவது பொருத்தமானதாகும்.

புதுமை, கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்முனைவு உள்ளிட்டவற்றில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழகம், இந்திய பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய தொழில்துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக திகழும் மிகப்பெரிய தொழிலதிபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்திய நாட்டை தொழில்நுட்ப சக்தியாக மாற்றுவதில் தமிழகத்தின் பங்களிப்பு அளப்பரியது. உலக அளவில் உற்பத்தித் துறையில் இந்தியா புதிய தலைமையாக மாறி வருவதிலும் தமிழகத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாகவும் ஸ்டார்ட்- அப் நிறுவனங்களின் தேசமாகவும் மாறும். அந்த இலக்கை விரைவாக எட்டுவதில் உயர்கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. மத்திய அரசு புதுமை, கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப தீா்வுகள், ஆராய்ச்சி துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆராய்ச்சித் துறையில் கணிசமான முதலீடு செய்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் ரூ.1.2 லட்சம் கோடி கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க தொகை ஆராய்ச்சிக்கும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்க பல்வேறு புதிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, டீன் மனு சந்தானம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) டி.ஜி.சீத்தாராம், டிஆர்டிஓ டைரக்டர் ஜெனரல் (தொழில்நுட்பம்) மங்கல் லால் சந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கண்காட்சியில் 85-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ட்ரோன் தொழில்நுட்பம், ஏவுகணை தொழில்நுட்பம், சூரிய மின்சாரம், காற்றாலை சக்தி, ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம், மனிதர்களின் உருவத்தைப் பெற்றிருக்கும் ஹியூமனாய்டு ரோபோக்கள் தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் மாதிரிகளை காணலாம். இந்த கண்காட்சி இன்று (சனிக்கிழமை) நிறைவடைகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here