ஜாமியா மிலியா பல்கலை. மாணவர் சங்க அரசியலமைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 15 நாள்களுக்குள் தேர்தல் நடைபெறும் என்று பதிவாளர் மஹ்தாப் ஆலம் ரிஸ்வி தெரிவித்தார். இதை மாணவர்கள் ஏற்கவில்லை. தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும், தேர்தலுக்குத் தெளிவான கால அட்டவணை வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நேற்று காலை சுமார் 100 மாணவிகள் பல நுழைவுவாயில்கள் வழியாக வளாகத்துக்குள் சென்றனர். சிலர் 7-ம் எண் நுழைவுவாயில் அருகே திரண்டு, “டெல்லி போலீசே, திரும்பிப்போ” என முழக்கமிட்டனர். இணையவழி வகுப்புகளை நிறுத்துதல், உணவகங்கள்-நூலகம் திறப்பு, அரசியலமைப்பு ஒப்புதலுக்குக் காலக்கெடு, தலைமை ஒழுங்கு அதிகாரியின் பதவி விலகல் ஆகியவை மாணவர்களின் பிற கோரிக்கைகள் ஆகும்.
5 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின், மாணவர்களின் இடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்படும் என்றும், பாதுகாப்பு ஊழியர்களின் அத்துமீறல் குறித்து விசாரிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 12-ல் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, தேர்தல் விதிகளை வகுக்க நிர்வாகம் குழு அமைத்தது.
எனினும், காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த 4 மாணவர்களில் இருவர் திங்கள்கிழமை போராட்டத்தை முடித்துக் கொண்ட நிலையில், ஏபின் பேசில் மற்றும் ரெஹான் கான் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றம் அதிகரித்ததால் அனைத்து வகுப்புகளும் இணையவழிக்கு மாற்றப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை வளாகத்தின் நுழைவுவாயில்களும் நூலகங்களும் மூடப்பட்டுள்ளன.
