Home தேசிய செய்திகள் பிரதமர் மோடியின் தந்தை குறித்த கார்கே பேச்சை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடியின் தந்தை குறித்த கார்கே பேச்சை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

0

பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, லக்னோ, பெங்களூரு, ஜம்மு, பாட்னா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று (அக்.25) நடைபெற்ற அம்மாநில முதல் முதல்வர் ஸ்ரீகிருஷ்ண சிங்கின் 139-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், பிரதமர் மோடி எங்கும் செல்ல மாட்டார் என அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினார். இதனால், கோபமடைந்த கார்கே, மோடி மட்டுமல்ல, அவரது அப்பாவும் செல்வார் என ஆவேசமாகக் கூறினார்.

பிரதமர் மோடியின் மறைந்த தந்தை குறித்து ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனது பேச்சுக்காக கார்கே மன்னிப்பு கோர வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். டெல்லி, லக்னோ, பாட்னா, பெங்களூரு, ஜம்மு என நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கார்கேவின் இந்தப் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங், “பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தந்தை குறித்த கார்கேவின் பேச்சு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது, பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இவ்வாறு பேசியது ஒரு சாதாரண தொண்டரோ, இளம் தலைவரோ அல்ல. நாட்டின் மிகப் பழமையான அரசியல் கட்சி என தங்களை அழைத்துக்கொள்ளும் ஒரு தேசிய கட்சியின் தலைவரே இவ்வாறு பேசியுள்ளார்.

தனது நடத்தையின் மூலம் காங்கிரஸ் தலைவர் கோடிக்கணக்கான நமது நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி இதோடு நின்றுவிடவில்லை. கார்கேவின் வார்த்தைகளை நியாயப்படுத்த முயல்வதன் மூலம் அவர்கள் மக்களின் உணர்வுகளை மேலும் புண்படுத்தி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version