பிரதமர் மோடி மற்றும் அவரது தந்தை குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஹார் மாநிலம் பாட்னாவில், பிஹாரின் முதல்வராக இருந்த கிருஷ்ண சிங்கின் 139-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், பிரதமர் மோடி எங்கும் செல்ல மாட்டார் என அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினார். இதனால், ஆவேசமடைந்த கார்கே, பிரதமர் மோடி மட்டுமல்ல, அவரது தந்தையும் செல்வார் என்ற ரீதியில் பேசினார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் மறைந்த தந்தை குறித்து ஒருமையில் பேசுவதா? என்று கூறி பாஜக மேலிடம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் கார்கேவின் பேச்சைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நேற்று பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, பாட்னா, ஜம்மு, லக்னோ, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாட்னாவில் நடைபெற்ற பேரணியின்போது கார்கேவின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. டெல்லியில் அமைந்துள்ள கார்கேவின் இல்லத்தை நோக்கிச் செல்ல முயன்ற பாஜக தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
ராஜ்நாத் சிங் கண்டனம்
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “பிரதமர் மோடியின் தந்தை குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியது கண்டிக்கத்தக்கது. கார்கே, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக அதனை நியாயப்படுத்தி வருகிறார். இது சரியல்ல” என்றார்.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, “பிரதமரைப் பற்றி தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது அரசியல் நாகரிகத்துக்கு எதிரானது” என்றார்.
