தேர்தல் ஆணையருக்கு தடை விதிக்கக் கோரும் எந்த மனுவும் விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்று தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் அதிகாரத்தைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதாகக் கூறி ராகேஷ் குமார் சிங் தொடர்ந்த வழக்கில் இந்த பதில் மனுவை தாக்கல் செய்துள்ள தேர்தல் ஆணையம், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் மூன்று உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதலுடன் எடுக்கப்பட்டது. அவசரமான விவகாரங்களில் தேர்தல் ஆணையர்கள் மின்னணு முறையில் ஒப்புதல் அளிப்பதாகவும், பின்னர் அந்த ஒப்புதல் கோப்புகளில் பதிவு செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ல் எந்தத் திருத்தமும் செய்யவில்லை என்றும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காகப் பயன்படுத்தப்படும் கூடுதல் உறுதிமொழிப் படிவம் தனியான ஆவணம் என்றும், இணையதளத்தில் அது இடம்பெற்றுள்ள விதம் படிவத்தில் மாற்றம் செய்யப்பட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
மேலும், 2025 ஜூன் 24, அக்டோபர் 27, 2026 மே 14 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட எஸ்ஐஆர் தொடர்பான மூன்று உத்தரவுகளும் தேர்தல் ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளின் அடிப்படையிலேயே பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
