தாய்லாந்து நாட்டில் பள்ளி ஒன்றில் இன்று (ஆக.7) காலை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தாய்லாந்து தலைநகருக்கு வடமேற்கில் அமைந்துள்ள பாங் க்ருவாய் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் பதின்ம வயதுடைய மாணவர் என்று தகவல் கிடைத்துள்ளது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் என இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.
தாக்குதலை மேற்கொண்டவர் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளார். தாக்குதலுக்கு பிறகு அவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் அதை போலீஸ் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் பிரசெர்ட் சந்தரருவாங்தோங், பள்ளியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தாய்லாந்து நாட்டில் துப்பாக்கி உரிமம் கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 10 மில்லியன் பேர் துப்பாக்கி உரிமம் கொண்டுள்ளதாக தகவல்.
தாத்தா, பாட்டியை சுட்டுக் கொன்ற கொலையாளி
பள்ளியில் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபடுவதற்கு முன்பு, தனது வீட்டில் இருந்த தாத்தா, பாட்டியை கொலையாளி சுட்டுக் கொன்றுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் பள்ளியில் சுமார் 26 ரவுண்டுகள் துப்பாக்கியால் அவர் சுட்டுள்ளார். இதில் 7 பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர் மாணவர் என்பதையும் உறுதி செய்துள்ளனர்.
தாய்லாந்து பிரதமர் இரங்கல்
இந்த சம்பவத்துக்கு தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விராகுல் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
