இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20-ல் தென் ஆப்பிரிக்கா வெற்றி

0
273

மழையால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கார்டிஃப் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 9 ஓவர்களை கொண்டதாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதிகபட்சமாக கேப்டன் எய்டன் மார்க் ரம் 28, டெவால்ட் பிரேவிஸ் 23, டோனோவன் பெரைரா 25 ரன்கள் சேர்த்தனர்.

வெகுநேரத்துக்கு பின்னர் மழை நின்ற நிலையில் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிமுறையில் இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இதன்படி 5 ஓவர்களில் 69 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. அதிரடியாக விளையாடிய அந்த அணியால் 5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 54 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பில் சால்ட், கேப்டன் ஹாரி புரூக் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ஜாஸ் பட்லர் 11 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் விளாசினார். ஜேக்கப் பெத்தேல் 7, டாம் பேன்டன் 5 ரன்களில் வெளியேறினர். சேம் கரண் 10, வில் ஜேக்ஸ் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால் அந்த அணியால் 11 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் மார்கோ யான்சன், கார்பின் போஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் இன்று இரவு 11 மான்செஸ்டர் நகரில் நடைபெறுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here