சூரிய ஆராய்ச்சிக்கான ப்ரோபா-3 செயற்கைக்கோள் இன்று ஏவப்படுகிறது

0
207

சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் இன்று (டிச.4) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஒரு அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் அமைப்பு மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரியனை ஆராய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்தது.

இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி ராக்கெட் வாயிலாக விண்ணில் நிலைநிறுத்த இஎஸ்ஏ நிறுவனத்துடன், இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதன்படி ப்ரோபா-3 செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச.4) மாலை 4.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 3.08 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ப்ரோபா-3 இரட்டை செயற்கைக்கோள் புவியில் இருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. அங்கிருந்தபடியே 2 செயற்கைக்கோள்களும் 150 மீட்டர் இடைவெளியில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்ப உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here