அமெரிக்காவில் ஒரு தொடக்கப் பள்ளியில் தாக்குதல் நடத்திய வழக்கின் விசாரணையில், பிறந்தநாள் பரிசாக தாய் கொடுத்த துப்பாக்கியால் 4 பேரை சிறுவன் சுட்டுக்கொன்றது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ஓரிகன் மாகாணம் பெண்ட் நகரில் சில்வர் ரயில் என்ற தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. கடந்த 15-ம் தேதி இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கிரிஃபின் ஜே. ஜான் என்கிற 16 வயது சிறுவன் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டான். இதில் 5, 8 மற்றும் 11 வயதான 3 மாணவர்களும், ஒரு ஆசிரியரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 வயது சிறுமியும், 54 வயதான ஆசிரியையும் காயமடைந்தனர்.
இதற்கிடையில் தனது 2 மகள்கள் படிக்கும் பள்ளியில் துப்பாக்கி சத்தம் கேட்டதை அடுத்து, அந்த வழியாக சென்று கொண்டிருந்த கெய்லுப் ஜியாமான்கோ (38) என்கிற நபர் உடனடியாக அங்கு விரைந்தார். பின்னர் அவர் தாக்குதல் நடத்திய கிரிஃபின் ஜே. ஜானை தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதனால் பல உயிர்கள் காப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், 4 பேரை சுட்டுக்கொன்ற கிரிஃபின் ஜே. ஜானுக்கு அந்தத் துப்பாக்கியை அவனது தாயாரே பிறந்தநாள் பரிசாக வழங்கியது தற்போது தெரியவந்துள்ளது. ஜானின் தாயார் ஷான்டாய் நிக்கர்சன், கடந்த ஆகஸ்டில் ‘மேவரிக் 88 பம்ப்-ஆக் ஷன் 12-கேஜ்’ துப்பாக்கியை சட்டப்படி வாங்கியதும், பின்னர், அதை பொழுதுபோக்கு பயன்பாட்டுக்காக தனது மகனுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், ஜான் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவன் என்றும், அங்கு அவன் சிறப்பு தேவைகள் கொண்ட மாணவராக படித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் சட்ட ரீதியாக பொறுப்பேற்க வேண்டிய நிலை குறித்து அரசு வழக்கறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.














