ஷம்ஸ் முலானி 7 விக்கெட் கைப்பற்றி அபாரம்: ஆஸ்திரேலியா-ஏ அணியை வீழ்த்திய இந்தியா-ஏ

0
20

புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய-ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான அதிகரபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா-ஏ பிரமாதமாக பந்து வீசி ஆஸ்திரேலியா-ஏ அணியை 162 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்தியா-ஏ இடது கை ஸ்பின்னர் ஷம்ஸ் முலானி இந்த டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளை இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்துக் கைப்பற்றி அசத்தினார்.

இந்தியப் பிட்ச்களுக்கேயுரிய 4-ம் நாள் ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா-ஏ அணி திணறியதில் ஆச்சரியமில்லை. ஆனால், சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா-ஏ அணி பேட்ஸ்மேன்கள் தயாராக வந்திருந்த நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவுக்குப் பின்னடைவு ஏற்படுத்தினர்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியின் கடைசி நாளில், அன்ஷுல் காம்போஜ் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஃபெர்கஸ் ஓ’நீல் மட்டும் இந்தியா-ஏ அணியின் வெற்றியை சிறிது நேரம் தாமதப்படுத்தினார். உணவு இடைவேளைக்குப் பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறங்கி, இரண்டாவது இன்னிங்ஸின் முதல் 30 நிமிடங்களிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

அன்ஷுல் காம்போஜ் சீரற்ற பவுன்ஸை சிறப்பாகப் பயன்படுத்தினார். அவர் வீசிய பந்து ஒன்று எதிர்பாராத வகையில் எகிற நாதன் மெக்ஸ்வீனியின் கையுறையில் பட்டு இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. இரண்டு ஓவர்கள் கழித்து, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் முன்னோக்கி வந்து பந்தை எதிர்கொள்ள முயன்றார். ஆனால், பந்து அவரது மட்டையின் கீழ் புகுந்து ஆஃப்-ஸ்டம்பை பதம் பார்த்தது.

துஷார் தேஷ்பாண்டேவும் இதே பந்துவீச்சு முறையைப் பயன்படுத்தி ஜோஷ் பிலிப்பி மற்றும் லியாம் ஸ்காட் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார்.

ஹாட்ரிக் பந்தை ஃபெர்கஸ் ஓ’நீல் சமாளித்தார். பின்னர் 52 பந்துகளில் 47 ரன்கள் (5 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்த அவர், இந்தியா-ஏ அணியின் வெற்றியை தாமதப்படுத்தினார். தனுஷ் கோட்டியன் பந்துவீச்சில் இரண்டு முறை மிட்-விக்கெட் திசையில் பந்தை தூக்கி அடித்த அவர், ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். மேலும், ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் பாயிண்ட் திசையிலும் பவுண்டரி பெற்றார்.

எனினும், கோட்டியன் விக்கெட் இன்றி திரும்பவில்லை. 26 ரன்களில் விளையாடிய ஜேசன் சாங்காவை போல்டாக்கி ஆட்டமிழக்கச் செய்தார். அதற்கு முன்பு ஷம்ஸ் முலானியின் பந்துவீச்சில் சாங்காவுக்கு இரண்டு முறை வாய்ப்பு கிடைத்திருந்தது. எல்பிடபிள்யூ முறையீட்டுக்கு தேவ்தத் படிக்கல் டிஆர்எஸ் கேட்காமல் விட்டதும், குமார் குஷாக்ரா ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஓ’நீலுடன் டாட் மர்பி இணைந்து போராடினார். இருவரும் 8-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்ததால், இந்தியா-ஏ அணி மேலும் ஒரு செஷனை களத்தில் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஷம்ஸ் முலானி தனது சுழலில் ஓ’நீலை சிக்க வைத்தார். ஆன்-சைடு பகுதியில் பொறி வைத்த முலானி, ஓ’நீலை ஸ்லாக் ஸ்வீப் ஆடத் தூண்டினார். ஆனால், அந்த பந்து டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனது. இதனால், அரைசதத்தை எட்டுவதற்கு 3 ரன்கள் குறைவாகவே ஓ’நீல் ஆட்டமிழந்தார்.

அடுத்த இரண்டு ஓவர்களில் டாட் மர்பி மற்றும் பிரெண்டன் டோகெட் ஆகியோரையும் முலானி வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா ஏ அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here