கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் தொடர்பாக மேலும் ஏழு பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இதுவரையில் 21 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சடையன், தேவபாண்டலம், சிவகுமார்,சென்னை, பன்சிலால்,சென்னை, கௌதம்,சென்னை,ரவி, தேவபாண்டலம், செந்தில், சேஷ சமுத்திரம், ஏழுமலை, மல்லிகைப்பாடி ஆகிய ஏழு பேரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் கள்ளச் சாராயம் அருந்தி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கைதான 17 பேரில் 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 221 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் இப்போதுவரை 5 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 59 பேர் உயிரிழந்தனர். இதில் 55 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
நேற்று மாலை வரை உள் நோயாளிகளாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 111 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 12 பேர், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 29 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் என 156 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.