ராணுவ மையத்தை கண்காணிக்க மின்கம்பத்தில் ரகசிய கேமரா பொருத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரில் மிகப் பெரிய ராணுவ மையம் மற்றும் ராணுவத் தலைமையகம் உள்ளது. இதன் அருகில் பதிண்டா விமானப்படைத் தளமும் உள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் நடைபெற்ற சாலை விபத்து தொடர்பாக போலீஸார் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் இருந்த மின் கம்பத்தில் ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இது காவல் துறையால் பொருத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்பின் அந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அது சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கக் கூடியது என்பதும், அதில் சிம் கார்டு பொருத்தப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. அதன் பதிவுகள் பாகிஸ்தான் மற்றும் கனடாவில் உள்ள தேச விரோத சக்திகளுக்கு அனுப்பப்பட்டதும் தெரியவந்தது. அந்த சிம்கார்டை வாங்கியவர் குறித்து விசாரணை நடத்தியபோது, அமிர்தசரஸ் மாவட்டம் சாராய் கிராமத்தைச் சேர்ந்த சமையல்காரர் அசோக் சிங் (40) என்பவர் சிக்கினார்.
இவர்தான் சிசிடிவி கேமரா மற்றும் சிம் வாங்கி அக்ஷ்தீப் சிங் (22) என்ற வேலையில்லா நபருடன் சேர்ந்து மின் கம்பத்தில் பொருத்தியுள்ளார். இதையடுத்து இருவ ரும் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னணியில் மூளையாக செயல்பட்ட நபர் மற்றும் அவரது கூட்டாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.
பதிண்டா சாலையில் ராணுவ நடமாட்டம் குறித்த வீடியோ பதிவுகளை இவர்கள் பாகிஸ்தான் மற்றும் கனடாவில் உள்ள தீவிரவாத சக்திகளுக்கு அனுப்பும் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து பதிண்டா பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.















