நாடு முழுவதும் எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பின் அரசியல் பிரிவாக இந்திய சமுதாய ஜனநாயக (எஸ்டிபிஐ) கட்சி கருதப்படுகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் எஸ்டிபிஐ தேசிய தலைவர் பைஸி கடந்த 3-ம் தேதி டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உட்பட 10 மாநிலங்களில் எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிதி ஆதாரங்களை எஸ்டிபிஐ பயன்படுத்தியது தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன.
இதே விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் மேட்டுப்பாளையம், கோவை, ஆற்காடு, வேலூரில் சோதனைகள் நடைபெற்றன.
கேரளாவின் கோட்டயத்தில் எஸ்டிபிஐ நிர்வாகி நிஷாத் என்பவரின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இவர் தடை செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பின் பிராந்திய செயலாளராக பதவி வகித்தவர் ஆவார். அவரது வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பரின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. கேரளாவின் பாலக்காட்டில் உள்ள எஸ்டிபிஐ நிர்வாகி ஒருவரின் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி உள்ளது.
ராஜஸ்தானில் சோதனை: ராஜஸ்தானின் கோடா மாவட்டம், பில்வாராவை சேர்ந்த தொழிலதிபர் ஆலானி என்பவரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இவர் அடிக்கடி துபாய் சென்று திரும்பி வந்துள்ளார். இவருக்கும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ரகசிய இடத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு பாப்புலர் பிரன்ட் ஆப் (பிஎப்ஐ) இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் அரசியல் பிரிவாக எஸ்டிபிஐ கருதப்படுகிறது. இரு அமைப்புகளுக்கும் இடையே ஏராளமான நிதிப் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. பிஎப்ஐ மூத்த நிர்வாகிகளே தற்போது எஸ்டிபிஐ கட்சியின் மூத்த தலைவர்களாக உள்ளனர். எஸ்டிபிஐ தேசிய தலைவர் பைஸி அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவல்களின்பேரில் நாடு முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.