சென்னை அடுத்த கவரப் பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி20 கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. போட்டியை ஆர்எம்கே கல்வி குழுமத்தின் இயக்குநர் ஜோதி நாயுடு தொடங்கி வைத்தார்.
ஆர்எம்கே பொறியியல் மற்றும் டெக்னாலஜி கல்லூரி தனது முதல் ஆட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த அண்ணா பல்கலைக்கழக அணி 18.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிருஷாந்த் 30 ரன் எடுத்தார். ஆர்எம்கே அணி தரப்பில் கன்னலி 3 விக்கெட் வீழ்த்தினார். 109 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்எம்கே அணி 17.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. அருண் 39, ராகேஷ் 29 ரன்கள் சேர்த்தனர். மற்றொரு ஆட்டத்தில் ஆர்எம்டி பொறியியல் கல்லூரி 57 ரன்கள் வித்தியாசத்தில் பனிமலர் கல்லூரியை வீழ்த்தியது.