2018-ம் ஆண்டு காஷ்மீர் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற பிரிகேடியர் சுட்டுக் கொலை

0
140

காஷ்மீரில் உள்ள சுன்ஜ்வான் ராணுவ முகாம் மீது கடந்த 2018-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர், 12-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர், பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய பிரிகேடியர் அமிர் ஹம்சா. இவர் பாகிஸ்தான் உளவுப்பிரிவு (ஐஎஸ்ஐ) நடவடிக்கைகளை திட்டமிடும் பிரிவில் பணியாற்றினார். பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் இவர் எமர்ஜென்சி சர்வீசஸ் அகாடமியின் தலைமை இயக்குனராக பணியாற்றினார்.

இந்நிலையில் இவர் பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் உள்ள ஜீலம் மாவட்டத்துக்கு, கடந்த திங்கள்கிழமை காரில் சென்றார். உடன் அவரது மனைவியும், மகளும் இருந்தனர். அமிர் ஹம்சாவின் சகோதரர் அயுப் என்பவர் அவர்களின் காரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். லீலா இன்டர்சேன்ஜ் என்ற இடத்தில் அமிர் ஹம்சாவின் காரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 நபர்கள் நெருங்கினர். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் அமிர் ஹம்சா மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அமிர் ஹம்சா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் குண்டு காயம் அடைந்தனர். அமிர் ஹம்சா இறந்ததை உறுதி செய்த பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவத்தை அமிர் ஹம்சாவின் சகோதரர் அயுப், நேரில் பார்த்தார். இதுகுறித்து போலீஸில் அயுப் புகார் அளித்தார். தாக்குதல் நடத்திய நபர்கள் காரில் இருந்து எந்த பொருளையும் எடுக்கவில்லை என அமிர் ஹம்சாவின் மனைவி மற்றும் மகள் தெரிவித்தனர். அமிர் ஹம்சாவுக்கு தனிப்பட்ட விரோதிகள் யாரும் இல்லை என அவரது மனைவி கூறினார். இது நன்கு திட்டமிட்ட கொலை என பாகிஸ்தான் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலையில் அமிர் ஹம்சாவின் சகோதரர் அயுப் மீதும் போலீஸாருக்கு சந்தேகம் உள்ளது. பாகிஸ்தான் ஐஎஸ்ஐ முன்னாள் அதிகாரி திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதால், இது குறித்து பாகிஸ்தானில் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

காஷ்மீரின் சுன்ஜ்வான் ராணுவ முகாம் தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு முக்கிய நபர் லஷ்கர் கமாண்டர் காஜா ஷாகித் என்ற மியா முஜாகித். இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் சுன்ஜ்வான் ராணுவ முகாம் தாக்குதலில் தொடர்புடைய இரண்டாவது முக்கிய நபர் அமிர் ஹம்சாவும் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்காக பணியாற்றிய அமிர் சர்ஃபரஸ் என்பவர், லாகூரில் கடந்த ஏப்ரல் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பல தாக்குதல்களை நடத்தி லஷ்கர் -இ-தொய்பா கமாண்டர் அபு ஹன்சாலா கராச்சியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2016-ம் ஆண்டு பதன்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி ஷாகித் லத்தீப் கடந்த ஆண்டு அக்டோபரில் சியால்காட் மசூதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.