Home மாநில செய்திகள் “குறுவையில் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்” – இபிஎஸ் கோரிக்கை

“குறுவையில் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்” – இபிஎஸ் கோரிக்கை

0

“இந்த ஆண்டு ஆழ்துளை கிணறு பாசனத்தை நம்பி 2 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. அதில் ஒரு லட்சம் ஏக்கர் தண்ணீர் இல்லாமல் வறண்டு பாதிக்கப்பட்டுவிட்டது. அவ்வாறு சேதமடைந்த பயிர்களுக்கு, உரிய அதிகாரிகளை அனுப்பி கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காய்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து இரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்துள்ளோம். அதிமுக மட்டுமல்லாது அனைத்துக் கட்சி தலைவர்களும், கர்நாடக அரசு போல தமிழகத்திலும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி கருத்து கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறோம்.

இதற்கு முன்பு அதிமுக, திமுக அரசுகள் இருக்கும் போது, காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளை அழைத்து கருத்துக்களை கேட்டு, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பது என்பதே நடைமுறையாக உள்ளது. ஒவ்வொரு முறையும் கர்நாடகாவிடம் போராடி, வாதாடி தண்ணீர் பெற வேண்டி உள்ளது. இந்த ஆண்டு கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும், தண்ணீர் திறக்க மறுக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம் 3,500 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டும், கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை. அவ்வாறு அவர்கள் தண்ணீர் திறந்திருந்தால் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருப்பார்கள். இப்போது கர்நாடக அணைகள் நிரம்பியதால் உபரி நீர் தான் வந்துகொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு ஆழ்துளை கிணறு பாசனத்தை நம்பி 2 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்தார்கள். அதில் ஒரு லட்சம் ஏக்கர் தண்ணீர் இல்லாமல் வறண்டு பாதிக்கப்பட்டுவிட்டது. அவ்வாறு சேதமடைந்த பயிர்களுக்கு, உரிய அதிகாரிகளை அனுப்பி கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version