மகா கும்பமேளா தொடர்பான மனு நிராகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் முறையிட உச்ச நீதிமன்றம் அறிவுரை

0
35

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பான பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிட தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மவுனி அமாவாசையை ஒட்டி கடந்த 29-ம் தேதி பிரயாக்ராஜில் சுமார் 10 கோடி பக்தர்கள் திரண்டனர். அன்று அதிகாலை திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஒரே நேரத்தில் சுமார் 10 லட்சம் பேர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் “மகா கும்பமேளாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விஐபி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும்” என்று கோரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தர பிரதேச அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். அவர் கூறும்போது, “கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு சார்பில் நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கமிஷன் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தார்.

மனுதாரர் விஷால் திவாரி முன்வைத்த வாதத்தில், “மாநில அரசின் கவனக்குறைவால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழக்கூடாது. பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு தேவையான வழிகாட்டு நெறிகளை உச்ச நீதிமன்றம் வரையறுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு கூறியதாவது: மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் உயிரிழந்தது மிகவும் துயரமான சம்பவம். இதை கவனத்தில் கொள்வது அவசியம். இதுதொடர்பாக மாநில அரசு சார்பில் நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இப்போதைய நிலையில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுவது சிறந்ததாக இருக்கும். எனவே மனுதாரர் விஷால் திவாரி உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம். இவ்வாறு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

இதுகுறித்து வழக்கறிஞர் விஷால் திவாரி கூறும்போது, “எனது மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவுரைப்படி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வேன்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here