மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்ததற்கு சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என பாஜக எம்.பி. ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
2025-26 பட்ஜெட் தாக்கல் மற்றும் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, பாஜக எம்.பி. ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றும் வரும் மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி 29-ம் தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 உயிரிழந்ததுடன் 60 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில் இருந்து இந்த சம்பவத்துக்கு சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. முழு விசாரணை நடந்து முடிந்ததும் அதன் பின்னணியில் இருந்தவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.