நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் தொடர்பான 279 விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்வதாக பிரதமர் அலுவலகத்துக்கு வருங்கால வைப்பு நிதி நிறுவன ஆணையர் பதிலளித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் 2022-ம் ஆண்டு நவ.4-ம் தேதியிட்ட உத்தரவின்படி, இபிஎஸ்- 95 திட்டத்தின்கீழ் ஓய்வுபெற்ற ஊழியர்கள் உயர் பென்ஷன் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள். அதன் அடிப்படையில், 2014-ம் ஆண்டு செப்.1-ம் தேதி-க்கு பிறகு, பணியில் இருக்கும் ஊழியர்களும், ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனமும் இணைந்து கூட்டு விருப்பம் (ஜாய்ன்ட் ஆப்சன்) வழங்கியுள்ளார்கள்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும் 2014-ம் ஆண்டு செப்.1-ம் தேதிக்கு பிறகு, பணி ஓய்வுபெற்ற ஊழியர்களிடம் விண்ணப்பங்களை பெற்று அதனை முறைப்படி, சென்னை ராயப்பேட்டை வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த 279 விண்ணப்பங்களையும் ராயப்பேட்டை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிராகரிப்பு செய்ததாக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராயப்பேட்டை வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கூறும்போது, ராயப்பேட்டை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வாகத்துக்கோ, உறுப்பினர்களுக்கோ எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் உயர் பென்ஷன் தொகை விண்ணப்பங்களை நிராகரிப்பு செய்தது உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானதாகும். நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் தொடர்பான 279 விண்ணப்பங்களை ராயப்பேட்டை வருங்கால வைப்புநிதி நிறுவனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.
இதுதொடர்பாக பிரதமர், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்வதாக வருங்கால வைப்புநிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் விஸ்வநாதன் கூறியதாவது:
நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் தொடர்பான 279 விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு மனு அனுப்பி இருந்தோம். எங்கள் கோரிக்கை மனுவை பிரதமர் அலுவலகம் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. தொழிற்சங்க கோரிக்கை தொடர்பாக பல்வேறு சுற்றுகளுக்கு பிறகு சனிக்கிழமை (மே 10) முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லியில் வருங்கால வைப்புநிதி நிறுவன ஆணையர் ராஜேஷ் பாண்டே, பிரதமர் அலுவலகத்துக்கு பதில் அனுப்பி உள்ளார். அதில், இந்த விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார். எனவே, வருங்கால வைப்புநிதி நிறுவனத்துக்கு சமர்ப்பிக்க வேண்டிய உயர் பென்ஷன் தொடர்பான விண்ணப்பங்களை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பணியாளர்களிடம் பெற்று விரைந்து வருங்கால வைப்புநிதி நிறுவனத்துக்கு முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.