ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த குஜராத் அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது.
ஜேக்கப் டஃபி வீசிய முதல் ஓவரில் சாய் சுதர்சன் 2 பவுண்டரிகள் அடித்தார். புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் ஷுப்மன் கில் பவுண்டரி ஒன்றை அடித்தார். ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஷுப்மன் கில் அடுத்த பந்தை விளாச முயன்ற போது மிட் ஆஃப் திசையில் நின்ற ரஜத் பட்டிதாரிடம் கேட்ச் ஆனது.
10 பந்துகளை சந்தித்த ஷுப்மன் கில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து நிஷாந்த் சிந்து களமிறங்கினார். நிதானமாக விளையாடிய சாய் சுதர்சன் 12 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் வீசிய பவுன்சரை விளாச முயன்ற போது விக்கெட் கீப்பரின் வலதுபுறம் உயரமாக சென்றது. இதை ஜிதேஷ் சர்மா மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று கேட்ச் செய்தார். 26 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய ஜாஸ் பட்லர் நிதானமாக பேட் செய்தார்.
ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 5-வது ஓவரில் நிஷாந்த் சிந்து தொடர்ச்சியாக 2 பவுண்டரிகள் விரட்டினார். பவர்பிளேவில் குஜராத் அணி 45 ரன்கள் எடுத்தது. சீராக ரன்கள் சேர்த்து வந்த நிஷாந்த் சிந்து 18 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் ரஷிக் சலாம் வீசிய பந்தை லாங் ஆன் திசையில் விளாசிய போது எல்லைக் கோட்டுக்கு அருகே தேவ்தத் படிக்கலிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார்.
10 ஓவர்களில் குஜராத் அணி 63 ரன்கள் எடுத்தது. ஜாஸ் பட்லர் 23 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் கிருணல் பாண்டியா பந்தில் ஸ்டெம்பிங்க் ஆனார். இதையடுத்து களமிறங்கிய அர்ஷத் கான், கிருணல் பாண்டியா வீசிய பந்தை மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் விளாசினார். ஜேக்கப் டஃபி வீசிய 14-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகளை விரட்ட 4-வது பந்தை அர்ஷத் கான் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
இந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதிரடியாக விளையாட முயன்ற அர்ஷத் கான், ஜோஷ் ஹேசில்வுட் வீசிய பந்தில் ஃபைன் லெக் திசையில் நின்ற ரஷிக் சலாமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அர்ஷத் கான் 6 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 15 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து ராகுல் டெவாட்டியா களமிறங்கினார். 14.2 ஓவரில் குஜராத் அணி 100 ரன்களை எட்டியது. ரஷிக் சலாம் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் ராகுல் டெவாட்டியா, ரஜத் பட்டிதாரிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
டெவாட்டியா 5 பந்துகளில், 7 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் 7 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்திலும், ரஷித் கான் 7 ரன்களில் ரஷிக் சலாம் பந்திலும் நடையை கட்டினர். சீராக ரன்கள் சேர்த்த வாஷிங்டன் சுந்தர் 37 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 50, காகிசோ ரபாடா 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி அணி தரப்பில் ரஷிக் சலாம் 4 ஓவர்களை வீசி 27 ரன்களை மட்டும் வழங்கி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், கிருணல் பாண்டியா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்சிபி அணிக்கு வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. காகிசோ ராபடா வீசிய 2-வது ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசி மிரட்டினார் வெங்கடேஷ் ஐயர். முகமது சிராஜ் வீசிய அடுத்த ஓவரில் விராட் கோலி 2 பவுண்டரிகளும், வெங்கடேஷ் ஐயர் ஒரு பவுண்டரியும் விரட்டினர்.
ரபாடா வீசிய 4-வது ஓவரை விராட் கோலி பதம் பார்த்தார். இந்த ஓவரில் விராட் கோலி 3 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் விளாசினார். முகமது சிராஜ் வீசிய 4-வது ஓவரின் 2-வது பந்தை சிக்ஸருக்கு விளாசிய வெங்கடேஷ் ஐயர் அடுத்த பந்தை மிட் ஆன் திசையில் விளாச முயன்ற போது ரபாடாவிடம் கேட்ச் ஆனது. 16 பந்துகளை சந்தித்த வெங்கடேஷ் ஐயர் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் ஒரு ரன் எடுத்த நிலையில் ரபாடா பந்தை தேர்டுமேன் திசையில் விளாசிய போது அர்ஷத் கானிடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ரஜத் பட்டிதார் களமிறங்கினார். பவர் பிளேவில் ஆர்சிபி அணி 70 ரன்கள் குவித்தது. முகமது சிராஜ் வீசிய 7-வது ஓவரின் முதல் பந்தை ரஜத் பட்டிதார் டீப் பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார்.
9-வது ஓவரை வீசிய ரஷித் கான் 2 விக்கெட்களை வீழ்த்தி திருப்பு முனையை ஏற்படுத்தினார். ரஜத் பட்டிதார் 13 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆன் திசையில் ரபாடாவிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்கிய கிருணல் பாண்டியா ஒரு ரன் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பின்னர் டிம் டேவிட் களமிறங்கினார். ஜேசன் ஹோல்டர் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசப்பட்டது.
10 ஓவர்களில் ஆர்சிபி அணி 100 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி 25 பந்துகளில், 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் அரை சதம் கடந்தார். ரஷித் கான் வீசிய 13-வது ஓவரின் 3-வது பந்தை டிம் டேவிட் லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு விளாசினார். சீராக ரன்கள் சேர்த்த டிம் டேவிட் 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷத் கான் பந்தில் ஜாஸ் பட்லரிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து ஜிதேஷ் சர்மா களமிறங்கினார்.
அர்ஷத் கான் வீசிய 18-வது ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கும், கடைசி பந்தை சிக்ஸருக்கும் விராட் கோலி விளாச ஆர்சிபி அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 75 ரன்களும், ஜிதேஷ் சர்மா 14 பந்துகளில், 11 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட 3-வது அணி என்ற பெருமையை ஆர்சிபி அணி பெற்றது. இதற்கு முன்னர் சிஎஸ்கே அணி 2010, 2011-ம் ஆண்டுகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணி 2019, 2020-ம் ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்திருந்தன. சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு ரூ.20 கோடி பரிசு வழங்கப்பட்டது.
ரன் வேட்டை டாப் 5
வைபவ் சூர்யவன்ஷி – 776 (ராஜஸ்தான் ராயல்ஸ்)
ஷுப்மன் கில் – 732 (குஜராத் டைட்டன்ஸ்)
சாய் சுதர்சன் – 722 (குஜராத் டைட்டன்ஸ்)
விராட் கோலி – 675 (ஆர்சிபி)
ஹென்ரிச் கிளாசன் – 624 (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
சிறந்த ரன் குவிப்பு
கே.எல்.ராகுல் – 152* (டெல்லி கேப்பிடல்ஸ்)
அபிஷேக் சர்மா – 135* (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
ரியான் ரிக்கெல்டன் – 123* (மும்பை இந்தியன்ஸ்)
சஞ்சு சாம்சன் – 115* (சிஎஸ்கே)
குயிண்டன் டி காக் – 112*(மும்பை இந்தியன்ஸ்)
சிறந்த பந்துவீச்சு
மோஷின் கான் 23/5 (லக்னோ)
ஜோஷ் ஹேசில்வுட் 12/4 (ஆர்சிபி)
அகீல் ஹோசைன் 17/4 (சிஎஸ்கே)
ஜேமி ஓவர்டன் 18/4 (சிஎஸ்கே)
புவனேஷ்வர் குமார் 23/4 (ஆர்சிபி)
விக்கெட் வேட்டை டாப் 5
காகிசோ ரபாடா 29 (குஜராத் டைட்டன்ஸ்)
புவனேஷ்வர் குமார் 28 (ஆர்சிபி)
ஜோப்ரா ஆர்ச்சர் 25 (ராஜஸ்தான் ராயல்ஸ்)
ரஷித்கான் 21 (குஜராத் டைட்டன்ஸ்)
அன்ஷுல் கம்போஜ் 21 (சிஎஸ்கே)
