தேங்காப்பட்டணத்தில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இங்கு ஏராளமான நாட்டுப்புற படகுகளும், விசைப்படகுகளும் தங்குதளமாக கொண்டு மீன்பிடித்து தொழில் செய்து வருகின்றன. தற்போது இரைமன் துறை பகுதியில் கட்டப்படும் படகு தங்குதளத்தின் நீளம் அதிகரிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதை ஏற்று அரசு 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், ஊர் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தின் விரிவாக்கப் பணிகளும் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று தூத்துக்குடி மண்டலத்தை சேர்ந்த எட்டு கிராமங்களின் மக்கள், மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மண்டல முதன்மை குரு சில்வஸ்டார் குரூஸ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் குளச்சல் மீன்வளத் துறை உதவி இயக்குனர் அஜித் ஸ்டாலின், பொறியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக மறுகட்டுமானப் பணிகளில் தோல்வி ஏற்படாத வகையில் தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள வரைவுத் திட்டத்தின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வந்திருந்த அனைத்து மீனவ பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்தனர்.