விஷால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் ரவி அரசு. பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விஷால். அதில் சுந்தர்.சி உடனான பேச்சுவார்த்தை பட்ஜெட் பிரச்சினையால் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிப்பது உறுதியாகிவிட்டது. விரைவில் இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இப்படத்தில் நடிப்பவர்கள், தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே இன்னும் முடிவாகாமல் உள்ளது. விஷாலே தயாரிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. ‘ஈட்டி’ மற்றும் ‘ஐங்கரன்’ ஆகிய படங்களை இயக்கியவர் ரவி அரசு. அதற்குப் பின் சிவராஜ்குமார் நடிக்க புதிய படமொன்றை தொடங்கினார். அப்படம் கைவிடப்பட்டதால், விஷால் படத்தை இயக்கவுள்ளார்.
விஷால் நாயகனாக நடித்து இறுதியாக வெளியான படம் ‘ரத்னம்’. ஹரி இயக்கத்தில் வெளியான அப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.