குமரி மாவட்டத்திற்கு நேற்று கள்ளக்கடல் எச்சரிக்கை விடுப்பட்டிருந்தது. மதியம் முதல் நள்ளிரவு வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால் தேங்காய்ப்பட்டினம் பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. ஆனால் தேங்காய்ப்பட்டினம் பகுதியில் காலை முதலே கடல் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது.
அதே வேளையில் பகலில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. குறிப்பாக நேற்று நள்ளிரவு சுமார் 11 மணி வேளையில் ராமேசுவரம் துறைப் பகுதியில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் கடலரிப்புத் தடுப்பு சுவரைத் தாண்டி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. ஒரு சில வீடுகளிலும் தண்ணீர் உட்புகுந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த கடல் சீற்றத்தால் ராமேசுவரம் துறைக் கல்லறைத் தோட்டப் பகுதியில் சுமார் 15 மீட்டர் தூரத்திற்கு கடலரிப்புத் தடுப்பு சுவர் சேதமடைந்தது. சாலையும் சேதமாகியுள்ளது. இதில் வேறு சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இனி வரும் மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்தப் பகுதிகளில் இதைவிட அதிகப் பாதிப்பு ஏற்படவாய்ப்பு உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.