அதானி ஊழல் பிரச்சினையை திசை திருப்ப பாமக நிறுவனர் ராமதாஸ் முயற்சி செய்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் குற்றச்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வைகோ: மின்வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் நியூயார்க் நீதிமன்றம் கவுதம் அதானிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடி முதன்முதலில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது கவுதம் அதானியைதான் உடன் அழைத்துச் சென்றார். அதானி நிறுவனத்துக்கு ரூ.6,200 கோடி கடன் கொடுக்க பாரத ஸ்டேட் வங்கிக்கும் உத்தரவிட்டிருந்தார். அந்தவகையில் பிரதமர் மோடிதான் குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டும்.
ஆனால், அவர் மீது குற்றச்சாட்டுகளை தொடுக்காமல் வதந்திகளை செய்தியாக்கும் நோக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி வருகிறார். அதானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து ஏன் பாமக வலியுறுத்தவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு பிரச்சினையை திசை திருப்ப ராமதாஸ் முயற்சிக்கிறார். பொய் வதந்திகளுக்கு எல்லாம் முதல்வர் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை.
இரா.முத்தரசன்: பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், தொழிலதிபருமான அதானி மீது ஊழல் குற்றாட்டுகளை அமெரிக்க அரசின் நீதித்துறை வைத்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அதானி நிறுவனத்துடன் எவ்வித ஒப்பந்தமும் செய்யவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினிடம் அதானி நிறுவனம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முதல்வர் பதிலளித்தார். இதை பயன்படுத்தி பாமக, பாஜக கட்சிகள் அதானி மீதான குற்றச்சாட்டுகளை மூடி மறைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்பும் மலிவான செயலில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களது நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.