குடியரசு தலைவர் இன்று உதகை வருவதை முன்னிட்டு, நேற்று வாகன ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு வரும் அவர், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் உதகை வருகிறார். உதகையில் ராஜ்பவனில் அவர் தங்குகிறார்.
நாளை (நவ.28) குடியரசு தலைவர் கார் மூலமாக குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு செல்கிறார். அங்கு, போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
தொடர்ந்து, ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, அதிகாரிகள் மத்தியில் பேசுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் உதகை ராஜ்பவன் செல்கிறார். வரும் 29-ம் தேதி ஓய்வெடுக்கும் அவர், 30-ந் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் சூலூர் விமானப்படை தளம் வருகிறார். அங்கிருந்து திருவாரூர் செல்லும் குடியரசுத் தலைவர், மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிர் இருந்து வந்துள்ள 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குன்னூர் ராணுவப் பயிற்சிக் கல்லூரி, ராணுவ பயிற்சி மையம், தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம், உதகை ராஜ்பவன் மாளிகை, தீட்டுக்கல்-ராஜ்பவன் மாளிகை சாலை, உதகை-குன்னூர் சாலை, குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை, ரோந்துப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளையொட்டிய பகுதிகளிலும் ரோந்து மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று வாகன ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் வருகையின்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டால், ஹெலிகாப்டர் தரையிறங்க மசினகுடியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு, அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.